தமிழ் சினிமா கடந்த 100 ஆண்டுகளுக்கு மேல் தன்னுடைய பயணத்தை ஆரோக்கியமாக மேற்கொண்டு வருகிறது என்றால், அதில் எத்தனையோ கலைஞர்களின் முயற்சியும் அர்ப்பணிப்பும் அடங்கி இருக்கிறது என்று தான் கூறவேண்டும். தமிழ் சினிமாவின் தொடக்க காலத்தில் ஆண்களின் ஆதிக்கம் மட்டுமே அதிகம் இருந்த நேரத்திலும் கூட, தங்களுடைய அசாத்திய திறமையால் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட நடிகைகள் பலர் உள்ளனர். அப்படி தனக்கு ஏற்பட்ட பல தடைகளை தாண்டி சாதித்து முதல் பெண் இயக்குநர், முதல் பெண் தயாரிப்பாளர் மற்றும் முதல் பெண் கதையாசிரியர் என்ற சாதனையை படைத்த டி.பி.ராஜலட்சுமி குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
முதலில் சினிமாவில் வந்த படங்கள் ஊமைப் படங்களே. அத்தகைய ஊமைப்படங்களில் முதலில் அறிமுகமான நடிகை என்றால், டி.பி.ராஜலட்சுமிதான். இவர் நடித்த கோவலன் படம் 1929ம் ஆண்டு வெளியானது. 1931 செப்டம்பர் 31-ஆம் நாள் தீபாவளியை முன்னிட்டு தமிழின் முதல் பேசும் படம், காளிதாஸ் வெளியானது. காளிதாஸில் நாயகியாக நடித்தவர் டி.பி.ராஜலஷ்மி. தமிழின் முதல் பேசும் படத்தின் நாயகியான இவரது வாழ்க்கை அன்றைய பெண்களின் நிலை எப்படி இருந்தது என்பதற்கு சின்ன உதாரணம்.
முதன்முதலாக ஒரு படத்தை தயாரிக்கவும் செய்தார். 1936ம் ஆண்டு மிஸ் கமலா என்ற படத்தை தயாரித்து, தமிழ்த்திரையுலகின் முதல் பெண் தயாரிப்பாளர் என்ற படத்தைப் பெற்றார். இதில் ஒரு சுவாரஸ்யம் என்னவென்றால் இப்படத்திற்கு கதை எழுதி, அந்த கதையை இயக்கியதும் டி.பி.ராஜலட்சுமிதான்.
இந்த ஒரு படத்தின்மூலம் தமிழ்த் திரையுலகின், முதல் பெண் இயக்குநர் மற்றும் முதல் பெண் கதையாசிரியர் என்ற பட்டத்தையும் பெற்றார். நாற்பதுகளின் ஆரம்பத்திலேயே அவர் திரைப்படத்துறையிலிருந்து விலகினார். அவர் உச்சத்தில் இருந்த போது மக்கள் அவரை சினிமா ராணி என்று அழைத்தனர். அதற்கேற்ப அன்று அவர் திரையுலகின் ராணியாகவே திகழ்ந்தார்.
யார் இந்த டி.பி.ராஜலஷ்மி..? டி.பி.ராஜலஷ்மி தஞ்சை மாவட்டம் திருவையாறைச் சேர்ந்தவர். அப்பா பஞ்சாபகேச அய்யர், தாய் மீனாட்சியம்மாள். டி.பி.ராஜலஷ்மிக்கு அவரது 7 வயதிலேயே திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள். அப்போதே வரதட்சணை கொடுமையால் அவர்களது திருமண பந்தம் முறிந்திருக்கிறது. பஞ்சாபகேச அய்யர் தற்கொலை செய்து கொண்டதும், டி.பி.ராஜலஷ்மியின் 11 வயதில் அவர்கள் தஞ்சைக்கு வந்துள்ளனர். அங்கு நாடகங்களில் அவர் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். ராஜலஷ்மிக்கு இருந்த குரல்வளத்தால் குறுகிய காலத்திலேயே அவர் புகழ்பெற்றார்.
பால்யத்திலேயே பல துயரங்களையும், இழப்புகளையும் சந்தித்ததால் உலகை அப்போதே புரிந்து வைத்திருந்தார் ராஜலஷ்மி. வெள்ளையர்களுக்கு எதிரான நாடகங்களில் நடித்து பலமுறை அவர் கைது செய்யப்பட்டதாக அவரது மகள் கமலா பேட்டியொன்றில் குறிப்பிட்டுள்ளார். பறந்து போ வெள்ளை கொக்குகளே.. என்று வெள்ளையர்களே நாட்டைவிட்டுப் போங்கள் என்று மறைமுகமாக பாடியதற்கும் கைது செய்யப்பட்டிருக்கிறார். தமிழ் சினிமாவின் ராணியாக திகழ்ந்த டி.பி.ராஜலஷ்மி 1964 இல் உடல்நலக்குறைவால் காலமானார்.
Read more:மகளிர் தினத்தன்று எகிறிய தங்கம் விலை.. நகைப்பிரியர்கள் ஷாக்..! ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா…?