Spain king: ஸ்பெயினில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், பேரிடர் பாதிப்பை பார்வையிட சென்ற மன்னர் மீது மக்கள் சேற்றை வீசி தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐரோப்பாவில் உள்ள மிக முக்கிய நாடுகளில் ஒன்று ஸ்பெயின். கடந்த சில நாட்களுக்கு முன்பு இங்கு மிகப் பெரியளவில் மழை வெள்ளம் ஏற்பட்டது. கிழக்கு ஸ்பெயின் பகுதியில் சில நிமிடங்களில் கனமழை கொட்டி தீர்த்த நிலையில், அங்கு மிக மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சில நிமிடங்களில் இந்த பாதிப்பு ஏற்பட்டதால் மக்களால் தப்பிக்கக் கூட முடியவில்லை. வாகனங்கள், வீடுகள் மற்றும் கடைகள் என எல்லாமே வெள்ளத்தில் சிக்கியது. அங்கு இதுவரை 213 உடல்களை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
அங்குள்ள கிழக்கு வலென்சியா பிராந்தியத்தில் தான் பாதிப்பு மிக மோசமாக இருந்துள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. அங்கு வீடுகள், தெருக்கள் மற்றும் சாலைகளை மண் மற்றும் குப்பை மூடியுள்ள நிலையில், தன்னார்வலர்கள் மீட்பு பணிகளில் இறங்கியுள்ளனர். பல பகுதிகளில் இன்னுமே மின்சாரம் மற்றும் தண்ணீர் சேவை சீராகவில்லை. மேலும் அத்தியாவசிய பொருட்களும் தட்டுப்பாடு நிலவுகிறது.
அங்கு மாக்ரோ மற்றும் துரியா நதிப் படுகைகளில் மழை கொட்டி தீர்த்த நிலையில், போயோ ஆற்றங்கரையில் நீர் அளவு அதிகரித்துள்ளது. இதனால் அங்குக் கரையை ஓட்டியுள்ள பகுதிகளில் மிகப் பெரியளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கண் இமைக்கும் நேரத்தில் அங்குப் பெரிய வெள்ளம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஸ்பெயின் நாட்டின் வலென்சியா நகரில் மிக மோசமான பாதிப்புகள் ஏற்பட்டது. கடந்த 20 மாதங்களில் பெய்த மழையை விட அந்த குறிப்பிட்ட எட்டு மணி நேரத்தில் அதிக மழை பெய்ததாக ஸ்பெயின் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், ஸ்பெயினின் மன்னர் ஆறாம் ஃபிலிப், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பைபோர்டா பகுதிக்கு ராணி லெடிசியா மற்றும் பிரதமர் பெட்ரோ சான்செஸ் உடன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர்களை சூழ்ந்து புகைப்படக் கலைஞர்கள் புகைப்படம் எடுத்துள்ளனர். இதனால் விரக்தியடைந்த உள்ளூர் மக்கள், ராஜா, ராணி மற்றும் பிரதம மந்தி மீது முட்டை மற்றும் சேற்றை வீசியுள்ளனர். ”கொலைகாரர்களே, வெளியேறுங்கள்” என்ற முழக்கத்தையும் எழுப்பியுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து காவலர்கள் உதவியுடன் அங்கிருந்து வெளியேறிய ராஜா உள்ளிட்டோர், ஏற்கனவே திட்டமிட்டிருந்த ஆய்வு பணிகளையும் குறைத்துக் கொண்டனர். இதனிடையே, மன்னர் மீது பொதுமக்கள் சேற்றை வீசிய வீடியோம் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
Readmore: வெளுத்து வாங்கும் கனமழை!. பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு!