11-ம் வகுப்பு துணைத்தேர்வு எழுதியவர்களுக்கான முடிவுகள் இன்று வெளியிடப்படும் என அரசு தேர்வு துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் சேதுராமவர்மா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது; 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற துணைத்தேர்வு எழுதியவர்களுக்கான முடிவுகள் மதிப்பெண் பட்டியலாக இன்று மாலை 3 மணிக்கு http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. மாணவர்கள் தங்களின் பெயர், பிறந்த தேதி ஆகியவற்றைப்பதிவு செய்து மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் விடைத்தாள் நகல் மற்றும் மறு கூட்டலுக்கு 29-ம் தேதி முதல் 30-ம் தேதி வரையில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையில், அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்திற்குச்சென்று கட்டணத்தை செலுத்தி விண்ணப்பிக்கலாம்.
விடைத்தாள் நகல் அல்லது மறுகூட்டல் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றுக்கு மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். விடைத்தாள் நகல் பெற்ற பின்னரே மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க வேண்டும். கட்டணங்களைப் பணமாக மட்டுமே செலுத்த வேண்டும். விடைத்தாள் நகல் பதிவிறக்கம் செய்யும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.