சமாஜ்வாதி கட்சியின் நிறுவனரும் உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சருமான முலாயம் சிங் யாதவ் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 82.
முலாயம் சிங் யாதவ், உடல்நலக்குறைவு காரணமாக ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள ஒரு மருத்துவமனையில் கடந்த சில நாட்களாகவே சிகிச்சை பெற்று வந்தார். 1989-1991, 1993-1995, 2003-2007 காலகட்டத்தில் உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதல்வராக 3 முறை பதவி வகித்த அவர், 1996-1998ஆம் ஆண்டுகளில் தேவகௌடா மற்றும் இந்தர் குமார் குஜ்ரால் ஆகியோர் பிரதமராக இருந்தபோது இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சராகவும் இருந்துள்ளார். சம்யுக்தா சோசியலிச கட்சி, லோக் தளம், ஜனதா தளம், ஜனதா கட்சி உள்ளிட்டவற்றில் இருந்த முலாயம் சிங் யாதவ், 1992இல் சமாஜ்வாதி கட்சியை நிறுவினார்.

இந்நிலையில் அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ”சாதாரண சூழலில் இருந்து வந்த முலாயம் சிங் யாதவின் சாதனைகள் அசாதாரணமானவை. முலாயம் சிங் யாதவின் மறைவு நாட்டுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்” என பதிவிட்டுள்ளார்.

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “முலாயம் சிங் யாதவ் உ.பி மற்றும் தேசிய அரசியலில் தனித்துவம் மிக்கவர். எமர்ஜென்சி காலத்தில் ஜனநாயகத்தின் முக்கிய வீரராக இருந்தவர். பாதுகாப்பு அமைச்சராக, வலிமையான இந்தியாவுக்காக உழைத்தார். முலாயம் சிங் யாதவ் ஒரு குறிப்பிடத்தக்க ஆளுமை. மக்களின் பிரச்சினைகளை உணரும் ஒரு தலைவராக அவர் பரவலாகப் போற்றப்பட்டார். மக்களுக்கு விடாமுயற்சியுடன் சேவை செய்தார். லோக்நாயக் ஜேபி, டாக்டர் லோஹியாவின் கொள்கைகளை பரப்ப தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர்” என பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சரும், சமாஜ்வாதி கட்சித் தலைவருமான முலாயம் சிங் யாதவ் மறைவு வருத்தம் அளிக்கிறது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டுக்காக போராடிய மிகப்பெரிய தலைவர்களில் ஒருவர். மதச்சார்பற்ற கொள்கைகளில் ஆழ்ந்த ஈடுபாடுடன் இருந்தார். அவரது மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு என்று தெரிவித்துள்ளார். மேலும், திமுக சார்பில், கட்சியின் பொருளாளரும், திமுக நாடாளுமன்றக் கட்சித் தலைவருமான டி.ஆர். பாலு, முலாயம் சிங் யாதவிற்கு இறுதி மரியாதை செலுத்துவார் என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.