செங்கல்பட்டு மாவட்டம், புலிப்பாக்கம், மேட்டு தெரு பகுதியை சேர்ந்தவர் அருண் (35) கூலி தொழிலாளி. அருணும் அவரது மனைவியும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். குடிப்பழக்கத்திலிருந்து மீள்வதற்கு மறுவாழ்வு மையத்திற்கு, அருண் சென்று வந்த பிறகும் தொடர்ந்து மதுவுக்கு அடிமையாகவே இருந்து வந்துள்ளார்.
மனைவி பிரிந்து சென்றதிலிருந்து அடிக்கடி ஊரில் இருக்கும் நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களுடன் சென்று நள்ளிரவு வரை குடித்துவிட்டு போதையில் இருப்பதே வழக்கமாக கொண்டு இருந்துள்ளார் அருண். இந்த நிலையில் நேற்று முதல் அருண் திடீரென மாயமாகியுள்ளார். அருண் போதையில் எங்காவது சென்று இருக்கலாம் என அவர்கள் உறவினர்களும் விட்டுவிட்டனர்.
இந்நிலையில் கூடுவாஞ்சேரி அருகே இருவர் மது குடித்துவிட்டு , ஏதோ கொலை செய்து விட்டோம் என பேசிக்கொண்டு இருந்துள்ளனர். இது குறித்து, காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்ததின் பேரில் இருவரையும் விசாரித்தபோது அவர்கள் புலிப்பாக்கம் மேட்டு தெரு பகுதியை சேர்ந்த பசுபதி மற்றும் தனசேகர் என தெரிய வந்துள்ளது. மேலும் இவர்களை கைது செய்து விசாரணை நடத்தியதில் அருணை கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளனர்.
இது குறித்து காவல் துறையினர் தெரிவிக்கையில், புலிப்பாக்கம் ஹைவே டவுன் பகுதியில் அருண், பசுபதி மற்றும் தனசேகர் ஆகியோர் இணைந்து மது அருந்தி உள்ளனர். அப்பொழுது அருணுக்கும் மற்ற இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த பசுபதி மற்றும் தனசேகர் ஆகியோர் இணைந்து அருணை, நைல் கட்டரில் இருக்கும் சிறிய கத்தியை பயன்படுத்தி கண் காது முகம் உள்ளிட்ட பகுதிகளில் 30 லிருந்து 40 முறை குத்தி உள்ளனர். இதனையடுத்து, அங்கு இருந்த கால்வாயில் அருணை தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர்.
சம்பவ இடத்திலேயே அருண் துடிதுடித்து உயிரிழந்துள்ளார் . மறுநாள் காலை அருண் உயிரிழந்திருக்கிறாரா, என்பது குறித்து சம்பவ இடத்திற்கு வந்த இருவரும் உறுதிப்படுத்தி உள்ளனர். அருண் அந்த பகுதியிலே இறந்த கிடந்ததை பார்த்து பயத்தில் அங்கிருந்து சென்று கூடுவாஞ்சேரி பகுதியில் மது அருந்திய பொழுது உளறி மாட்டிக் கொண்டுள்ளனர். அதனைத்தொடர்ந்து இருவரையும் கைது செய்து கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.