தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், வங்கக்கடலில் உருவாகி இருக்கும் ஹாமூன் புயல் நாளை கரையை கடக்கும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நேற்று (அக்.23) காலை மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று மாலை ஹாமூன் புயலாக வலுப்பெற்று, இன்று (அக்.24) காலை தீவிர புயலாக வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது. இது இன்று காலை 08.30 மணி அளவில் மேலும் வலுப்பெற்று வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மிக தீவிர புயலாக நிலவுகிறது.
இது மேலும் வடகிழக்கு திசையில் நகர்ந்து புயலாக வலுவிழந்து வங்கதேச கரையை கெபுபரா மற்றும் சிட்டகாங் இடையே 25ஆம் தேதி மாலை கடக்கக்கூடும். இதன் காரணமாக தென்தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வடதமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அக்.25ஆம் தேதி தென்தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வடதமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அக்.26 முதல் 28ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அக்.29, 30ஆம் தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.