அமலாக்கத்துறை அறிக்கையில் சொன்ன ரூ.1,000 டாஸ்மாக் ஊழல் பின்னணியில் உள்ள அந்த தியாகி யார்..? என்ற கேள்வியை பேட்ஜாக அணிந்து சட்டப்பேரவை நிகழ்வுகளில் அதிமுக உறுப்பினர்கள் இன்று கலந்து கொண்டனர். மேலும், சட்டப்பேரவைக்குள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் இன்று ஒருநாள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். பதாகைகளை காட்டிய 7 அதிமுக உறுப்பினர்கள் மட்டும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், மற்றவர்கள் வெளிநடப்பு செய்தனர்.
மேலும், இனி எந்த உறுப்பினரும் பேட்ஜ் அணிந்து சட்டப்பேரவைக்கு வரக்கூடாது என சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டுள்ளார். வெளிநடப்பு செய்த மற்ற அதிமுக உறுப்பினர்கள் அவைக்குள் வரலாம் என்றும் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, வெளிநடப்பு செய்த உறுப்பினர்கள் மீண்டும் சட்டப்பேரவைக்குள் சென்ற நிலையில், அமளியில் ஈடுபட்டனர். ஆனால், வாசகங்கள் கொண்ட பேட்ஜ் அணிந்து உள்ளே வரக்கூடாது இதுதான் என் தீர்ப்பு என்று சபாநயகர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.