குடிபோதையில் கல்வி அலுவலக ஊழியர்களிடம் ரகளையில் ஈடுபட்ட அரசுப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
நாமக்கல்லை சேர்ந்தவர் திருச்செல்வன் (52). இவர், சுண்டைக்காய் பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நேற்று இவர், பள்ளியின் வங்கி வரவு, செலவு கணக்குகளை மற்றொரு வங்கிக்கு மாற்றம் செய்வதற்கான பணியை நாமக்கல் வட்டார வளமைய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தலைமை ஆசிரியர் திருச்செல்வன் மது அருந்தி விட்டு வந்து அங்குள்ள ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டார்.
மேலும், அந்த அலுவலகம் உள்ள நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தனது காரில் வேகமாக சுற்றி சுற்றி வந்தார். இதனால், கல்வித்துறை அதிகாரிகள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரிடம் புகார் அளித்தனர். அப்போது தலைமை ஆசிரியர் திருச்செல்வன், அதிகாரிகளை தரக்குறைவாக பேசியதுடன் தன்னை பணியிடை நீக்கம் செய்யுமாறு போதையில் மிரட்டல் விடுத்தார்.
இதனைத் தொடர்ந்து அவரை அங்கிருந்து அதிகாரிகள் வெளியேற்றினர். இது தொடர்பாக கல்வி அதிகாரிகள் விசாரணை செய்து ஆட்சியரிடம் அறிக்கை தாக்கல் செய்தனர். இதையடுத்து, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் தலைமை ஆசிரியர் திருச்செல்வத்தை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கல்வி அலுவலர் சுப்பிரமணி (பொறுப்பு) உத்தரவிட்டார்.