சொத்து வரி உயர்த்தப்பட்டதை எதிர்த்து தொடர்ந்த வழக்கில், ஆவணங்களை தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் ஆண்டுதோறும் சொத்து வரியினை உயர்த்துவதற்கு நகராட்சி மன்றங்களானது நடவடிக்கை எடுக்கவேண்டுமென சட்ட முன்வடிவை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு கடந்த சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அதன் அடிப்படையில் சென்னை மாநகராட்சி அறிவித்தது. இந்நிலையில் சென்னை சேர்த்த ஒருவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு ஒன்றில் அடுக்குமாடி குடியிருப்பின் உரிமையாளரான தனக்கு 2022-23 ஆம் நிதியாண்டின் முதல் அரையாண்டிற்கான சொத்து வரி ரூ.3,695 வசூலிக்கப்பட்ட நிலையில், இரண்டாவது அரையாண்டிற்கு 7,170 ரூபாயாக உயர்த்தி ஜூன் 28-ம் தேதி சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சென்னை மாநகராட்சியின் இந்த நடவடிக்கை சட்டத்திற்கு முரணானது என்றும், மாநகராட்சி எல்லைக்குட்பட்ட அனைத்து தெருக்கள், பகுதிகள் என அனைத்திற்கும் ஒரே மாதிரியான சொத்து வரி நிர்ணயித்துள்ளது சட்ட விரோதமானது. அதனால், தனக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸுக்கு தடை விதித்து, அதை ரத்து செய்ய வேண்டும் என கூறியிருந்தார். இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில் உரிய விவரங்களை மாநகராட்சி தாக்கல் செய்யவில்லை என்றும், கணக்கீட்டு முறை தெரிந்தால் தான் உயர்த்தப்பட்ட வரி சரியானதா…? என்பதை கண்டறிய முடியும் என கூறிய நீதிபதி, ஆவணங்களை வரும் 3-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என கூறி வழக்கை ஒத்தி வைத்தார்.