மதுரை தல்லாகுளம் பகுதியில் இருக்கும் நாராயணபுரம் நாகம்மாள் கோவில் தெருவில் வசிப்பவர் செல்வம். இவருடைய மகன் மணி என்ற வெள்ளை மணி (24). இவர் ஒரு ஆட்டோ டிரைவர். இந்நிலையில் நேற்று அதிகாலை செல்லூர் வைகை ஆற்றின் வடகரை பகுதியில் மணி வயிற்றில் கத்திக்குத்து காயங்களுடன், தலையில் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த தகவல் காவல்துறையினருக்கு கிடைத்தது. உடனே செல்லூர் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையிலான காவல்துறையினர் அங்கு விரைந்து சென்றனர்.
அங்கு சென்ற காவல்துறையினர் கொலை செய்யப்பட்டு கிடந்த மணியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர். இதற்கிடையில் காவல்துறையினர் அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை சோதனை செய்தனர். அதில் நேற்று முன்தினம் இரவு மணி, அவருடைய நண்பர்கள் மூன்று பேருடன் சேர்ந்து வைகை வடகரை அருள்தாஸ்புரம் பகுதியில் மது அருந்தியது தெரிய வந்தது. அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் மணி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
மேலும் இறந்து போன மணி, வாலிபர் ஒருவரை கொலை செய்ததாக டி.கல்லுப்பட்டி காவல் நிலையத்தில் வழக்கும், செல்லூர் மற்றும் திலகர் திடல் காவல் நிலையத்தில் இரண்டு வழக்குகளும் நிலுவையில் இருக்கின்றன. எனவே இந்த வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் பழி தீர்க்கும் வகையில் மணியை கொலை செய்திருக்கலாம் அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறத் என காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். இதற்கிடையே மணியுடன் மது அருந்திய நண்பர்கள் மூன்று பேரை காணவில்லை. எனவே காவல்துறையினர் அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.