சேலம் மாவட்டம் ஜாகீர்ரெட்டிப்பட்டி ஓடை தெருவில் ரமேஷ் (35), மணிமேகலை (27) தம்பதியினர் வசித்து வந்தனர். இதில் ரமேஷ் ரயில் நிலையத்தில் மூட்டை தூக்கும் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். மணிமேகலையும் ரயில் நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு வெற்றிவேல் என்ற மகனும், நந்தினி என்ற மகளும் உள்ளனர். ரமேஷ் மது பழக்கத்துக்கு அடிமையானவர் என்பதால், அடிக்கடி வீட்டுக்கு மதுபோதையில் வருவதும், மனைவியுடன் தகராறு செய்வதும் வாடிக்கையாக இருந்துள்ளது.
இதற்கிடையே, மனைவியின் நடத்தையில் ரமேஷ் சந்தேகப்பட்டு அவரை அடித்து துன்புறுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சூழலில் கோடை விடுமுறையை முன்னிட்டு 2 குழந்தைகளும் உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டனர். சம்பவத்தன்று வழக்கம்போல் ரமேஷ், மது குடித்துவிட்டு போதையில் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டதால் மனைவியை தாக்கியுள்ளார். பின்னர் நடத்தையில் சந்தேகப்பட்டு பேசியதோடு, தாக்கியதால் மணிமேகலை ஆத்திரம் அடைந்து வீட்டில் இருந்த அம்மிக்கல்லை எடுத்து ரமேசின் தலையில் போட்டார். மீண்டும் அதே கல்லால் அவருடைய முகத்தில் தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த ரமேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பின்னர், கொலை செய்யப்பட்ட கணவரின் உடல் அருகேயே விடிய, விடிய மணிமேகலை உட்கார்ந்திருந்தார். பின்னர் விடிந்ததும் காலையில் நேராக காவல்நிலையம் சென்று, தனது கணவரை கொலை செய்துவிட்டதாக கூறி சரணடைந்தார். பின்னர் ரமேஷின் உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை தொடர்பாக மணிமேகலையை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் வீட்டுக்கு மது குடித்து விட்டு வரும் ரமேஷ், மனைவிக்கு செக்ஸ் தொல்லையும் கொடுத்துள்ளார். உல்லாசத்துக்கு அழைக்கும் போது செல்லவில்லை என்றால் மனைவியை வேறு ஒருவருடன் தொடர்புபடுத்தி ஆபாசமாக பேசி உள்ளார். மீண்டும் அதேபோன்று பேசியதால்தான் ஆத்திரத்தில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்ததாக மணிமேகலை கூறியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.