சென்னையில் செயல்பட்டு வரும் பிரபல திரையரங்கில் காலவதியான உணவுப் பொருட்கள் விற்க்கப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு அருகாமையில் ஆல்பர்ட் தியேட்டர் செயல்பட்டு கொண்டிருக்கிறது. ஆல்பர்ட் , பேபி ஆல்பர்ட் என இரண்டு ஸ்கிரீன்கள் செயல்படுகிறது. இந்த நிலையில் ஆல்பர்ட் தியேட்டருக்கு படம் பார்ப்பதற்காக ஒரு பெண் தனது குழந்தைகளுடன் வந்துள்ளார். இடைவேளை நேரத்தில் தியேட்டரில் உள்ள கேண்டீனில் குளிர்பானங்கள் வாங்கியுள்ளார்.
அந்த குளிர்பான பாட்டிலில் எந்தவிதமான தயாரிப்பு, காலாவதி தேதி எதுவும் இடம்பெறாமல் இருந்துள்ளது. மேலும் அதனை திறந்தபோது மதுபான வாடை அடித்துள்ளது. பாட்டில் மூடியை சுற்றிலும் கருப்பு நிறத்தில் படர்ந்து இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் தியேட்டர் நிர்வாகத்திடம் கேள்வி மேல் கேள்வி எழுப்பினார்..
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இந்த சம்பவம் தொடர்பாக எழும்பூர் போலீசார் நேரில் வந்து விசாரணை நடத்திய நிலையில், இன்று உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் சதீஷ்குமார் தலைமையிலான குழுவினர் ஆல்பர்ட் தியேட்டரில் அதிரடியாக சோதனை நடத்தினர். இதில் அங்கு வைக்கப்பட்டிருந்த குளிர்பானங்கள், சிப்ஸ் போன்ற திங்ஸ் பண்டங்கள், நூற்றுக்கும் மேற்பட்ட பாப்கான் டப்பாக்கள் ஆகியவை காலாவதியாகியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து அனைத்தையும் பறிமுதல் செய்த கையோடு கேண்டின் உரிமையாளரின் லைசன்ஸ் ரத்து செய்யப்பட்டது. இச்சம்பவத்தை தொடர்ந்து, சென்னை முழுவதும் உள்ள மால்கள் மற்றும் திரையரங்குகளில் உள்ள கேண்டின்களில் இதுபோன்று சோதனை நடத்த உள்ளதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Read more:பட்டாசுகள் வெடித்து சிதறியதில் பெரும் விபத்து.. 5 தொழிலாளர்கள் படுகாயம்..!!