பாட்னாவில் இருந்து ஜார்கண்ட் மாநிலம் டால்டன் பிரான்ச் நோக்கி சென்று கொண்டிருந்த ஹதியா விரைவு ரயிலில் பெண் ஒருவர் தன்னுடைய இரு மகள்களுடன் கடந்த 26 ஆம் தேதி பயணித்துக் கொண்டிருந்தார் நள்ளிரவு நேரத்தில் பயணிகள் எல்லோரும் உறங்கிக் கொண்டிருந்த சூழ்நிலையில், தன்னுடைய இரு மகள்களை படுக்கையில் தூங்க வைத்துவிட்டு, அந்த பெண்ணும் உறங்கிக் கொண்டு இருந்தார்.
அப்போது ஓடும் ரயிலில் சிறுமி திடீரென்று கண்விழித்துப் பார்த்தபோது ஒரு காவலர் அவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக சொல்லப்படுகிறது. இதைக்கண்டு அதிர்ந்து போன அந்த சிறுமி கட்டி கூச்சலிட்டு இருக்கிறார். அந்த சிறுமியின் தாய் மற்றும் பயணிகள் விழித்துக் கொண்ட சூழ்நிலையில், எல்லோரும் காவலரை பிடித்து வாக்குவாதம் மற்றும் அடிக்க தொடங்கி இருப்பதாக சொல்லப்படுகிறது.
இதற்கு நடுவே அடுத்தடுத்த பெட்டிகளில் இருந்த காவலர்கள் உடனடியாக வந்து பயணிகளிடம் சிக்கிக்கொண்ட காவலரை மீட்டு சென்றதாக சொல்லப்படுகிறது. இந்த சம்பவம் காரணமாக, சிறுமி மற்றும் அவருடைய தாயார் உள்ளிட்டோரும் பதறிப் போன நிலையில் மறுநாள் காலை ராஞ்சி ரயில் நிலையத்தில் இருக்கின்ற காவல் நிலையத்தில் அந்த பெண் புகார் வழங்கினார்.
இந்த புகார் குறித்து ரயில்வே பாதுகாப்பு படை காவலர் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த காவல்துறையினர் வழக்கை சம்பவம் நடந்த கொகர்மா ரயில் நிலைய காவல் நிலையத்திற்கு மாற்றினர். இந்த ரயிலில் பயணிக்கும் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் உண்டாகும் விதத்தில், காவலரே நடந்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திருப்பதாகவும் சம்பந்தப்பட்ட காவலர் மீது சரியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் ரயில்வே காவல்துறையினர் தெரிவித்திருக்கிறார்கள்.