நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கிய நிலையில், பிரதமர் மோடி நாடாளுமன்ற வளாகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “”ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு லட்சுமி தேவி அருள் புரிய வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். உலக அரங்கில், இந்தியா தன்னை சிறப்பாக நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது. எனது 3-வது ஆட்சிக்காலத்தில் தாக்கல் செய்யப்படும் முதல் முழுமையான பட்ஜெட் இதுவாகும்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ”இந்த பட்ஜெட் தேசத்திற்கு புதிய ஆற்றலையும், நம்பிக்கையையும் கொடுக்கும் என நான் நம்பிக்கையுடன் கூறுவேன்” என்று தெரிவித்துள்ளார். அதாவது, மத்திய பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், நடுத்தர வர்க்கத்தைப் பற்றி பிரதமர் மோடி குறிப்பிட்டுப் பேசியிருப்பதும், லட்சுமி தேவி அருள் புரிய வேண்டும் என்று சொல்லியிருப்பதும் மக்கள் மிகவும் எதிர்பார்க்கும், வருமான வரிச் சலுகையை வழங்குமா..? என்று ஆவலை அதிகரிக்கச் செய்துள்ளது.
நாளை பட்ஜெட் தாக்கல்
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடா் இன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது. நடப்பாண்டின் முதல் கூட்டத் தொடா் என்பதால், இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவா் உரையாற்றினார். இதனைத் தொடர்ந்து, பொருளாதார ஆய்வறிக்கையை மதியம் 1.15 மணியளவில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். 2025-26-ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை நாளை (பிப்ரவரி 1) தாக்கல் செய்யப்படவுள்ளது. மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தொடா்ந்து 8-ஆவது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றவுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.