எலான் மஸ்க் ட்விட்டரை கைப்பற்றியதில் இருந்து ட்விட்டர் ஏடாகூடமாக மாறி வருகிறது. ட்விட்டர் தளத்தின் அடிப்படையான தத்துவத்தில் பலவற்றையும் மாற்றி அதிர்ச்சி அளித்தார். காசு கட்டினால் ப்ளூ டிக் என்று தொடங்கி ப்ளூ டிக் வைத்திருப்பவர்கள் 10,000 வார்த்தைகள் வரை ட்வீட் செய்யலாம் என்பது வரை, எல்லா அப்டேட்டுகளும் விமர்சனங்கள் பெற்றாலும், அறிமுகப்படுத்தப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன. இதுமட்டுமின்றி, புதிய அம்சங்களைத் தவிர, பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படாத செயலிழந்த கணக்குகளை நீக்கி, காப்பகப்படுத்தும் திட்டத்தையும் ட்விட்டர் அறிவித்தது. இது ட்விட்டரை சுத்தமாகவும் புதுப்பித்ததாகவும் வைத்திருக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இருந்தது.
இந்த வரிசையில் தற்போது புதிய அம்சம் பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி, ட்விட்டரில் எடிட் செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டது. ஏற்கனவே 30 நிமிடங்கள் வரை எடிட் செய்து கொள்ளும் வசதி வழங்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் தான் தற்போது இதில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதாவது, எடிட் செய்யும் வசதிக்கான கால அளவு 30 நிமிடத்தில் இருந்து 60 நிமிடம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் ட்விட்டர் பதிவுகளை ஒரு மணி நேரத்தில் எடிட் செய்து கொள்ளலாம். அதிகபட்சமாக 5 முறை ட்விட் செய்வதோடு, அந்த பதிவில் எடிட் செய்யப்பட்ட ட்வீட் என்பது தெரிவிக்கப்படும். இந்த வசதி ட்விட்டர் ப்ளூ சந்தாதாரர்களுக்கு மட்டுமே செயல்பாட்டுக்கு வந்தது.
இந்த வசதிக்காக தனியே கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. ப்ளூடிக் பயன்பாட்டுக்கான கட்டணமே போதும். ட்விட்டரை பொறுத்தமட்டில் ப்ளூடிக் பயனர்களின் வலைதள பயன்பாட்டுக்கு மாதம் ரூ.650 மற்றும் மொபைல் போன் பயன்பாட்டுக்கு மாதம் ரூ.900 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ட்விட்டரின் சமீபத்திய பதிப்பின் மூலம், பயனர்கள் 2 மணி நேரத்திற்கு ஓடும் அல்லது 8 ஜிபி (8GB) வரையிலான அளவு கொண்ட வீடியோக்களை ட்விட்டர் தளத்தில் பதிவேற்றம் செய்து கொள்ளலாம். ஏற்கனவே 60 நிமிடங்கள் வரை வீடியோ பதிவேற்ற வரம்பு இருந்து வந்த நிலையில் தற்போது 2 மணி நேரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அம்சம் ப்ளு டிக் பயனர்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.