பழம்பெரும் நடிகை லீலாவதி தற்போது மோசமான உடல்நிலையில் படுக்கையில் அவதிப்பட்டு வருகிறார்..
பழம்பெரும் நடிகை லீலாவதி கன்னடம், தெலுங்கு மற்றும் தமிழ் என பல மொழி படங்களில் நடித்துள்ளார். 85 வயதான அவர், வயது தொடர்பான உடல்நலப் பிரச்சனைகளால் அவதிப்பட்டு வருவதாகவும், தற்போது அவர் படுத்தப்படுக்கையாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. லீலாவதி பெங்களூருக்கு வெளியே ஒரு பண்ணை வீட்டில் கடந்த சில வருடங்களாக வசித்து வருகிறார்.
நெலமங்களா அருகே உள்ள அவரது பண்ணை வீட்டிற்கு அவரது மருத்துவர் அடிக்கடி சென்று சிகிச்சை அளித்து வருகிறார். லீலாவதியின் உடல்நிலை குறித்து அறிந்த கர்நாடக திரைப்பட வர்த்தக வாரியத் தலைவர் பாமா ஹரீஷ் சமீபத்தில் லீலாவதியின் இல்லத்துக்குச் சென்று நலம் விசாரித்தார். லீலாவதியின் உடல்நலக்குறைவு குறித்த செய்தியை அவரது மகனும், நடிகருமான வினோத் ராஜ் தெரிவித்துள்ளார்.
மங்களூருவை பூர்வீகமாகக் கொண்ட லீலாவதி, 1949-ல் ஷங்கர் சிங்கின் நாககன்னிகா படத்தில் அறிமுகமானார். பக்த பிரஹலாதா மற்றும் தர்ம விஜயா போன்ற திரைப்படங்களில் நடித்த, விரைவில் அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் நடித்தார்.. இதுவரை சுமார் 600 படங்களில் அவர் நடித்துள்ளார்.
கர்நாடக அரசு லீலாவதிக்கு 2000 ஆம் ஆண்டில் டாக்டர் ராஜ்குமார் வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கி கௌரவித்தது, மேலும் 2008 ஆம் ஆண்டு தும்கூர் பல்கலைக்கழகம் சினிமாவுக்கு அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக கௌரவ டாக்டர் பட்டத்தையும் வழங்கியது. இவரது மகன் வினோத் ராஜ் கன்னட திரையுலகில் பணியாற்றும் குறிப்பிடத்தக்க நடிகர் ஆவார்.