மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்ட ஆரோக்கியநாதபுரம் பகுதியில் உள்ள 9 பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவிட்டுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகரில், செம்மங்குளம் பகுதியில் கடந்த 2ஆம் தேதி சிறுத்தை நடமாட்டம் தென்பட்டது. இதையடுத்து, சிறுத்தையை பிடிக்க
வனத்துறை, தீயணைப்புத்துறை மற்றும் காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், சிறுத்தை அங்கிருந்து 3 கிமீ தொலைவை நேற்றிரவு கடந்து ஆரோக்கியநாதபுரம் என்ற இடத்தில் பதுங்கியுள்ளது.
இதுகுறித்து ஆரோக்கியநாதபுரத்தில் முகாமிட்டு ஆய்வு செய்துவரும் நாகை மாவட்ட
வன அலுவலர் அபிஷேக் தோமர் கூறுகையில், ”சிறுத்தையை பிடிப்பதற்கு மதுரையில் இருந்து 3 கூண்டுகள் மற்றும் வலைகள் எடுத்து வரப்பட்டு காட்டுப்பகுதியில் வைக்கப்பட்டுள்ளது. ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருந்து வன காவலர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் வருகை புரிந்து 14 அதிநவீன சென்சார் பொருத்திய கேமராக்கள் காட்டுப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.
இந்நிலையில், சிறுத்தை நடமாட்டம் தென்பட்ட ஆரோக்கியநாதபுரம் பகுதியில் உள்ள மயூரா மெட்ரிக் பள்ளி, புனித அந்தோனியார் உயர்நிலைப்பள்ளி, டாக்டர் அம்பேத்கார்
நகராட்சி தொடக்கப்பள்ளி, சின்ன ஏரகலி நகராட்சி தொடக்கப்பள்ளி, அக்ளுர் ஊராட்சி
ஒன்றிய துவக்கப்பள்ளி, தூய அந்தோணியார் துவக்கப்பள்ளி, மறையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, அழகு ஜோதி நர்சரி பிரைமரி ஸ்கூல், கேம் பிரிட்ஜ் ஸ்கூல் ஆகிய 9 பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவிட்டுள்ளார்.
Read More : ”திராவிட கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டாம்”..!! விஜய் கட்சியின் அறிக்கை உண்மைதானா..? பரபரப்பு தகவல்..!!