fbpx

‘கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் நிகழ்வு’ – மதுரை ஆட்சியர் உத்தரவுக்கு தடை விதித்து ஆணை!

மதுரை சித்திரை திருவிழாவில் முன் அனுமதி பெற்றவர்கள் மட்டுமே, பாரம்பரிய முறையில் கள்ளழகரின் மீது தண்ணீர் பீய்ச்ச வேண்டும் என்ற மாவட்ட ஆட்சியரின் உத்தரவை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டு இருக்கிறது.

உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழா ஏப்ரல் 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 23-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு வருகிற 23ஆம் தேதி நடைபெறுகிறது. அந்த நிகழ்வின்போது, பாரம்பரிய முறைப்படி ஆட்டுத்தோலை பயன்படுத்தி தோல்பைகளில் நறுமண நீரை நிரப்பி கள்ளழகர் மீது நீரை பீய்ச்சி அடிப்பது வழக்கம்.

முன் அனுமதி பெற்றவர்கள் மட்டுமே, பாரம்பரிய முறையில் கள்ளழகரின் மீது தண்ணீர் பீய்ச்ச வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவு பிறப்பித்திருந்தார். ஆட்சியரின் இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ரஞ்சித் என்பவர் மனுதாக்கல் செய்தார்.

அந்த மனுவில்,  “மதுரை சித்திரை திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. அழகர் ஆற்றில் இறங்கும் போது அவர் மீது தண்ணீர் பீய்ச்சுவதை நேர்த்திக்கடனாக வைத்து பக்தர்கள் செய்வது வழக்கம். இந்த ஆண்டு கள்ளழகரின் மீது தண்ணீர் பீய்ச்ச முறையாக பதிவு செய்து முன் அனுமதி பெற வேண்டும்.  பாரம்பரிய முறையில் மட்டுமே தண்ணீர் பீய்ச்ச வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி  கள்ளழகர் கோயிலின் இணை ஆணையரால் அனுமதிக்கப்பட்டவர்கள் மட்டுமே எதிர்சேவை நிகழ்வின் போது கள்ளழகரின் மீது தண்ணீரை பீய்ச்ச இயலும். இதனால் என் போன்றோர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.  மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார். 

இந்த வழக்கு நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள்முருகன் அமர்வு முன் இன்று (ஏப்ரல் 18) விசாரணைக்கு வந்தது. அதனைத்தொடர்ந்து, தண்ணீர் பீய்ச்சி அடிக்க கட்டுப்பாடு விதித்தது மத வழிபாட்டில் தலையிடுவது போல் உள்ளதால் அதனை நீக்கிக் கொள்ள வேண்டும் என அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. 

கள்ளழகர் செல்லும் பாதை மற்றும் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வின் போது எவ்வளவு பேர் தண்ணீர் பீய்ச்சும் நிகழ்வில் கலந்து கொள்வர்? தற்போது 7 பேர் மட்டுமே தண்ணீர் பீய்ச்ச அனுமதி பெற்றுள்ள நிலையில், இது பாரம்பரிய நடைமுறையை பாதிக்காதா?  இவை தொடர்பாக ஏதும் புள்ளிவிவரங்கள் உள்ளதா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 

மேலும், மதுரை மாவட்ட ஆட்சியர் எந்த அதிகாரத்தின் அடிப்படையில் இந்த உத்தரவை பிறப்பித்தார்? சட்ட அலுவலர் அல்லது கோவில் நிர்வாகத்திடம் ஆலோசிக்கப்பட்டதா? என்பது குறித்து விளக்கமளிக்கும் வகையில் அவர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Next Post

"நீ என் மகன்.. நான் உன்னை நேசிக்கிறேன்!" - கத்தியால் குத்திய சிறுவனை மன்னித்த பிஷப்!

Thu Apr 18 , 2024
ஆஸ்திரேலியாவின் தேவாலயத்தில் நடத்தப்பட்ட கத்திக்குத்துத் தாக்குதலில் காயமடைந்த பிஷப் தன்னை தாக்கிய 16 வயது சிறுவனை மன்னித்துவிட்டதாக கூறியுள்ளார் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வேக்லி பகுதியில் உள்ள கிறிஸ்ட் தி குட் ஷெப்பர்ட் தேவாலயத்தில் கடந்த வியாழக்கிழமை பிஷப் மார் மாரி இம்மானுவேல் நேரடி ஒளிபரப்புச் சொற்பொழிவு நிகழ்த்திக்கொண்டிருந்தார். அப்போது, அடையாளம் தெரியாத 16 வயது சிறுவனால் கத்தியால் கொடூரமாகத் தாக்கப்பட்டார். தாக்குதலில் பிஷப் மார் மாரி இமானுவெலுக்குத் தலையிலும் […]

You May Like