கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கலுங்கடி பகுதியைச் சேர்ந்தவர் மந்திரவாதி மணிகண்டன் (35). கடந்த சில மாதங்களுக்கு முன் நாகர்கோவிலை சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவர் தனது மனைவிக்கு உடல்நிலை சரியில்லை என்று மந்திரவாதி மணிகண்டனை அணுகியுள்ளார். அதற்கு அவர், ’உங்கள் வீட்டில் பரிகார பூஜைகள் செய்ய வேண்டும்.. அப்படி செய்தால் உங்கள் மனைவிக்கு பிடித்த நோய் விலகும்’ எனக் கூறியுள்ளார். மந்திரவாதியின் பேச்சை கேட்டு வீட்டில் மாந்திரீக பூஜைகள் செய்ய அந்த கூலித்தொழிலாளி ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து, மந்திரவாதி மணிகண்டனும் சம்பந்தப்பட்ட வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு கூலித்தொழிலாளியின் 13 வயது மகள் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த மணிகண்டன் சிறுமியிடம் பேச்சுக் கொடுத்துள்ளார். மணிகண்டன் அடிக்கடி வீட்டிற்கு வருபவர் என்பதால், சிறுமியும் வீட்டிற்குள் அழைத்து பேசியுள்ளார். வீட்டில் யாரும் இல்லாததை அறிந்துக்கொண்ட மணிகண்டன் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்க ஆரம்பித்துள்ளார். இதையடுத்து, சிறுமியின் பெற்றோர்கள் வீட்டிற்கு வந்ததும் அவர்களிடம் கண்ணீர் விட்டு அழுது நடந்ததை கூறியுள்ளார். இதனால், அதிர்ச்சி அடைந்த பெற்றோர், மணிகண்டன் மீது நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், சிறுமியிடம் விசாரணை மேற்கொண்ட போலீசார், மந்திரவாதி மணிகண்டனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.