ஆறு வயதில் காணாமல் போன சிறுமியை, ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு, அவருடைய பெற்றோரிடம் ஒப்படைத்த மாவட்ட ஆட்சியர்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே, 9 வருடங்களுக்கு முன்னர் காணாமல் போன ஒரு இளம் பெண், மறுபடியும் தற்போது, தன்னுடைய பெற்றோரிடம் சேர்க்கப்பட்டிருக்கிறார்.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்துள்ள நல்லூர் கிராமத்தில் வசித்து வருபவர்கள் ஏழுமலை, சின்ன பாப்பா தம்பதியினர். இவர்களுடைய ஆறு வயது மகள் பிரியா கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்னர், காணாமல் போனார். அவரை மீட்ட ஒரு பெண், ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் இருக்கின்ற ஒரு தனியார் காப்பகத்தில் சேர்த்திருக்கிறார்.
அந்த காப்பகம் சட்டப்படியான உரிமம் இல்லாமல் இயங்கி வந்ததால், குழந்தைகள் நலக்குழுவினர் பிரியாவை மீட்டு, வேலூரில் இருக்கின்ற அரசு காப்பகத்தில் சேர்த்தனர். அங்கு வளர்ந்து வந்த அந்த சிறுமி பிரியா, பத்தாம் வகுப்பு வரையில் படித்தார். இந்த சூழ்நிலையில் சோளிங்கர் காப்பகத்தை நடத்தி வந்த கார்த்தி, பிரியா தன்னுடைய மகள் என்று உரிமை கொண்டாடி இருக்கிறார்.
இதன் பிறகு குழந்தை பிரியா, தன்னுடைய பெற்றோரை அடையாளம் காட்டியதன் பெயரில், ஏழுமலை, சின்ன பாப்பா தம்பதிக்கு, நீதிமன்ற உத்தரவின்படி, கடந்த 2021 ஆம் ஆண்டு டிஎன்ஏ பரிசோதனை செய்யப்பட்டது. அதன்படி பிரியாவின் தந்தை ஏழுமலை தான் என்று தெரியவந்தது. இந்த நிலையில் தான் வேலூர் மாவட்ட ஆட்சியர், குமாரவேல் பாண்டியன் முன்னிலையில், பிரியா அவருடைய பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.