திருப்பதி கோவில் வளாகத்தில் நடிகை கீர்த்தி சனோனுக்கு ஆதிபுருஷ் திரைப்பட இயக்குநர் ஓம் ராவத் முத்தம் கொடுத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இருவரும் ஓட்டல் ரூம்க்கு செல்ல வேண்டும் என தெலங்கானாவில் உள்ள சில்குர் பாலாஜி கோவிலின் தலைமை அர்ச்சகர் கடுமையாக சாடியுள்ளார்.
ராமாயண கதையின் ஒரு பகுதியை மையமாக வைத்து ‘ஆதிபுருஷ்’ என்ற திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ராமனாக நடிகர் பிரபாஸ், ராவணனாக சயிப் அலி கான், சீதையாக கீர்த்தி சனோன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படத்தை ஓம் ராவத் இயக்கியுள்ளார். இந்த படம் 3டி தொழில்நுட்பத்தில் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகி உள்ளது. ஜூன் 16ஆம் தேதி தியேட்டரில் ரிலீசாக இருக்கிறது. இதற்கிடையே தான் தொடர்ந்து ஆதிபுருஷ் திரைப்படம் சர்ச்சையை எதிர்கொண்டு வருகிறது.
இந்த திரைப்படத்தின் டிரெய்லர் வீடியோ கேமில் வருவது போன்ற கிராபிக்ஸ் காட்சியுடன் இருந்ததாக கூறியும், சயிப் அலி கான் நடித்ததற்கும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் கடந்த ஜனவரியில் வெளியாக வேண்டிய திரைப்படம் தள்ளிப்போனது. இதற்கிடையே தான் திரைப்படம் வெளியாகும் தேதி நெருங்கும் நிலையில் ஆதிபுருஷ் படத்தின் புதிய ட்ரெய்லர் வெளியானது. இதுவும் ரசிகர்களை ஈர்க்கவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் தான் ஆதிபுருஷ் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா திருப்பதியில் நடந்தது. நடிகர் பிரபாஸ், க்ரித்தி சனோன், சன்னி சிங் மற்றும் ஓம் ராவத் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றனர். அதன்பிறகு அவர்கள் அனைவரும் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். அப்போது கீர்த்தி சனோன் காரில் கிளம்ப தயாரான நிலையில் இயக்குனர் ஓம் ராவத் அவரை கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தம் கொடுத்தார்.
இந்த வீடியோ இணையதளங்களில் வெளியானது. கோவில் வளாகத்தில் நடிகை கீர்த்தி சனோனை இயக்குனர் ஓம்ராவத் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்ததற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் இது சர்ச்சையை கிளப்பியது. இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தான் தெலங்கானாவில் உள்ள சில்குர் பாலாஜி கோவிலின் தலைமை அர்ச்சகர் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. நடிகை கீர்த்தி சனோன் மற்றும் இயக்குனர் ஓம்ராவத் ஆகியோரின் செயல்கள் கண்டிக்கத்தக்கது. கணவன், மனைவி கூட அங்கு ஒன்றாக செல்வதில்லை. நீங்கள் ஓட்டல் அறைக்கு சென்று அதை செய்யலாம். உங்கள் நடத்தை ராமாயணத்தையும், சீதா தேவியையும் அவமதிப்பது போல் உள்ளத” என சாடியுள்ளார்.