தமிழகத்தில் வரும் 5-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், இலங்கை – திரிகோணமலையில் இருந்து கிழக்கு-தென்கிழக்கே சுமார் 160 கிலோ மீட்டர் தொலைவிலும், காரைக்காலில் இருந்து தென்கிழக்கே சுமார் 420 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டது. இது மெதுவாக மேற்கு – தென்மேற்கு திசையில் நகர்ந்து நேற்று இரவு 8 மணி அளவில் இலங்கை கடற்கரை பகுதிகளை கடந்தது.
![தமிழ்நாட்டில் கனமழை நிச்சயம்..!! மேலிடமே சொல்லிருச்சு..!! வெளுத்து வாங்குமாம்..!! கவனமா இருங்க..!!](https://1newsnation.com/wp-content/uploads/2022/11/Chennai-Rain-3-1024x683.jpg)
இதன் காரணமாக, இன்று தென்தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வடதமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 3-ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். வரும் 4,5 ஆகிய தேதிகளில் தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 முதல் 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். இன்று முதல் 4-ம் தேதி வரை இலங்கை மற்றும் தமிழ்நாடு கடலோர பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.