சிவகாசி மாவட்டம் முத்துராமலிங்கபுரம் காலனியைச் சேர்ந்த சுந்தர பாண்டியன் (36). இவர் சிவகாசி புறவழிச்சாலையில் கம்ப்யூட்டர் சாம்பிராணி தயாரிக்கும் நிறுவனத்தில் சுமை தூக்கும் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். சுந்தரபாண்டியன் வழக்கம்போல் தனது பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது நிறுவனத்தின் வெளியே உலர வைத்த சம்பிராணியை எடுத்து நிறுவனத்தினுள் வைக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது அவரை சுற்றி வளைத்த 5 பேர் கொண்ட கும்பல், அரிவாள்-கத்தி போன்ற ஆயுதங்களால் தலை மற்றும் உடலில் சரமாரியாக வெட்டியுள்ளனர்.
இதையடுத்து, சுந்தர பாண்டியனின் அலறல் சத்தம் கேட்டு சக தொழிலாளர்கள் நிறுவனத்தை விட்டு வெளியே வந்ததை தொடர்ந்து, அந்த கும்பல் இருசக்கர வாகனங்களில் தப்பிச் சென்றது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், 108 ஆம்புலன்ஸ் மூலம் ரத்த வெள்ளத்தில் கிடந்த சுந்தர பாண்டியனை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி சுந்தர பாண்டியன் உயிரிழந்தார். போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் திருமணமாகாத சுந்தரபாண்டியனுக்கு ஏற்கனவே திருமணமான 45 வயது பெண்ணுடன் கள்ள தொடர்பு இருந்து வந்ததும், அதன் காரணமாக கொலை நடந்திருக்கலாம் என்றும் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.