Spain Flood: ஸ்பெயின் நாட்டில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 158 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலர் மாயமாகியுள்ளதாக கூறப்படுகிறது.
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்பெயினில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. வலேன்சியா மாகாணத்தில் பெய்த கனமழையால் 12க்கும் மேற்பட்ட நகரங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்தது. பரியோ டிலா டோரோ நகரில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தில் கார்கள், மரக்கிளைகள் மற்றும் வீட்டில் இருந்த பொருட்கள் அடித்துசெல்லப்பட்டன. இது சுனாமியால் ஏற்பட்ட பாதிப்பை விட அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நுாற்றாண்டின் மிக மோசமான இயற்கை பேரிடராக இது கருதப்படுகிறது.
வலென்சியாவில் மட்டும் அக்.29 மற்றும் 30ம் தேதிகளில் 92 பேர் பலியாகினர். அண்டை மாகாணங்களில் பலர் பலியாகினர். இதனால் பலி 158 ஆக அதிகரித்துள்ளது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி விவசாய நிலங்களை மூழ்கடித்தன. கார்கள் மற்றும் வீட்டின் கூரைகளில் சிக்கி தவித்த 70க்கும் மேற்பட்டோர் ஹெலிகாப்டர் வாயிலாக மீட்கப்பட்டனர்.
வெள்ளத்தில் சிக்கிய வாகனங்கள் மற்றும் வீடுகளில் யாரும் சிக்கியுள்ளனரா என ராணுவத்தினர் தேடிவருகின்றனர். நேற்று முன்தினம் மட்டும் 110 பேரை மீட்டுள்ளனர். 22 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. வெள்ளப்பெருக்கால் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதுடன், குடிநீர் கிடைக்காமலும் ஏராளமானோர் அவதியடைந்துள்ளனர். பலர் மாயமாகி உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
2021 ஆம் ஆண்டில், ஜெர்மனியில் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தில் குறைந்தது 185 பேர் இறந்தனர். அதற்கு முன், 1970 இல் ருமேனியாவில் 209 பேர் இறந்தனர் மற்றும் 1967 இல் போர்ச்சுகலில் ஏற்பட்ட வெள்ளத்தில் கிட்டத்தட்ட 500 பேர் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Readmore: முன்னோர்களுக்கு படையல்..!! இன்று ஐப்பசி அமாவாசை..!! இதையெல்லாம் மறக்காமல் பண்ணுங்க..!!