வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க முடியாததால் தனது 11 வயது மகளை 40 வயது நபருக்கு திருமணம் செய்து கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் சிவன் மாவட்டத்தில் லட்சுமிபூர் என்ற கிராமம் உள்ளது. இங்கு 40 வயதை சேர்ந்த மகேந்திர பாண்டே என்பவர் வசித்து வருகிறார். இவர், அதே கிராமத்தில் வசித்து வரும் ஒரு பெண்ணுக்கு ரூ.2 லட்சம் கடன் கொடுத்து இருக்கிறார். அந்த பெண்ணால் வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க முடியாத நிலை இருந்திருக்கிறது. கடனை திருப்பித்தர முடியவில்லை என்றால் உன் மகளை எனக்கு திருமணம் செய்து கொடு என்று மகேந்திர பாண்டே கேட்டிருக்கிறார். ஒரே ஊர் என்பதால் அடிக்கடி அப்பெண்ணின் மகள் அவரின் வீட்டிற்கு சென்று வந்திருக்கிறார். அப்படி சென்று வந்த போது கொடுத்த கடனுக்காக அந்த 11 வயது சிறுமி என்றும் பாராமல் திருமணம் செய்து கொடு என்று கேட்டிருக்கிறார்.
அவர் தான் அப்படி கேட்கிறார் என்றால் பெற்ற தாய் கொஞ்சம் கூட ஆத்திரப்படாமல் சரி என்று சம்மதம் தெரிவித்திருக்கிறார். சம்மதம் சொல்லி திருமணமும் செய்து கொடுத்திருக்கிறார். இதன் பின்னர் திடீரென்று சிறுமியின் தாயார் போலீசில் சென்று புகார் அளிக்க, மகேந்திர பாண்டே மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். என் மகளை தன் வீட்டில் தங்க வைத்து படிக்க வைப்பதாக பாண்டே சொன்னார். ஆனால் படிக்க வைத்து அவளை திருமணம் செய்து கொண்டு விட்டார். என் மகள் எனக்கு வேண்டும் என்று புகாரில் தெரிவித்திருக்கிறார் அந்த சிறுமியின் தாயார்.
பாண்டேவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி மனைவி இருக்கிறார். ஆனாலும் அந்த சிறுமி, என்னுடைய தாயார் பாண்டே இடமிருந்து கடன் வாங்கியிருக்கிறார். எவ்வளவு வாங்கினார் என்பது பற்றி எனக்கு தெரியாது. ஆனால், வாங்கிய கடனுக்காக என் தாயாரின் சம்மதத்தின் பேரில் தான் என்னை பாண்டே திருமணம் செய்து கொண்டார். நாங்கள் சேர்ந்து வாழ விரும்புகிறோம். எங்களை என் தாயார் சிக்க வைத்து இருக்கிறார் என்று கூறியிருக்கிறார் அந்த சிறுமி. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.