குடும்பப் பிரச்சனை காரணமாக மருமகளின் தலையை வெட்டி எடுத்து வந்து, காவல் நிலையத்தில் சரணடைந்த கோபக்கார மாமியாரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தில் உள்ள கொத்தப்பேட்டை ராமாபுரத்தைச் சேர்ந்தவர் சுப்பம்மா. இவர், தனது மருமகள் வசுந்தரா தலையை வெட்டி எடுத்து வந்து காவல் நிலையத்தில் சரணடைந்தார். தலையுடன் நின்ற சுப்பம்மாவை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், அவரைக் கைது செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரித்தனர். அப்போது, மாமியார் சுப்பம்மா, மருமகள் வசுந்தரா இடையே அடிக்கடி குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்படுவது வழக்கம். அந்த வகையில் வசுந்தராவுக்கு ஆதரவாக அவரது குடும்ப உறுப்பினர்கள் வீட்டிற்கு வந்து சுப்பம்மாவை தாக்கிச் சென்றதாக கூறப்படுகிறது.

இதனால், ஆவேசம் அடைந்த சுப்பம்மா சம்பவத்தன்று மாலை யாரும் இல்லாத நேரத்தில் வசுந்தராவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஆள் கூட்டி வந்தா அடிக்கிறாய்? என்று ஆவேசமான சுப்பம்மா ஓடிச்சென்று வீட்டிலிருந்த பெரிய அரிவாளை எடுத்து மருமகள் வசுந்தராவின் தலையை, கிடாவை வெட்டுவது போல ஒரே வெட்டாக வெட்டி தனியாக எடுத்துள்ளார். தனக்கு நேர்ந்த அவமானத்துக்கு பழிக்கு பழியாக மருமகளை தீர்த்துக்கட்டிய வெறியுடன், சுப்பம்மா மருமகளின் தலையை கையில் பிடித்தபடி தனது ஏரியாவையே நடுங்க வைக்கும் வகையில் நடந்தே வந்து காவல் நிலையத்தில் சரணடைந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, கோபக்கார மாமியாரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
