சாலை பாதுகாப்பு வாரம் 2023 ஜனவரி 11 முதல் 17 வரை கடைபிடிக்கப்படும் நிலையில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கவனம் செலுத்தி வருகிறது.
சாலை பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான பொறியியல் நடைமுறைகளை அதிகரிக்க சாலை பாதுகாப்பு தணிக்கை குறித்து பொறியாளர்களுக்கு இந்த ஆணையம் பயிற்சி அளிக்கிறது. இதற்கு 15 நாட்கள் பயிற்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பயிற்சி முடிக்கும் பொறியாளர்களுக்கு மேலாளர் மற்றும் துணை பொது மேலாளர் பதவி உயர்வு அளிக்க வகை செய்யப்பட்டுள்ளது. 2022-23ம் ஆண்டில் இந்திய தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தைச் சேர்ந்த சுமார் 240 பொறியாளர்களுக்கு டெல்லி ஐஐடி, மத்திய சாலை ஆராய்ச்சி கழகம், இந்திய நெடுஞ்சாலைப் பொறியாளர்கள் நிறுவனம் ஆகியவற்றில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவுச்சாலைகளில் சாலை விபத்து சம்பவங்களை எதிர்கொள்வதற்கும், வரையறுக்கப்பட்ட வாகன வேகத்தை அமல்படுத்துவதற்கும் நெடுஞ்சாலைகளின் மற்ற ஒழுங்குமுறைகளுக்கும் மேம்படுத்தப்பட்ட மேலாண்மை முறை அமல்படுத்தப்பட்டு வருகிறது. இம்முறை 3 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவிலான தேசிய நெடுஞ்சாலைகளில் அமல்படுத்தப்பட்டுள்ளது.