Rekha Gupta: பிப்ரவரி 8 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட டெல்லி சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் பாஜக பெரும்பான்மையைப் பெற்றது. ஆம் ஆத்மி கட்சியை தோற்கடித்து 26 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக ஆட்சிக்கு வந்துள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிக்குப் பிறகு, பாரதிய ஜனதா கட்சி ரேகா குப்தாவை டெல்லியின் புதிய முதல்வராக நியமித்துள்ளது. ஷாலிமார் பாக் தொகுதியில் இருந்து தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் அவர் முதல் முறையாக எம்.எல்.ஏ.வானார்.
டெல்லியின் புதிய முதல்வராகப் பொறுப்பேற்ற ரேகா குப்தா, ஆரம்ப காலகட்டங்களில் கல்லூரியில் மாணவர் அணியின் தலைவராக இருந்து பல்வேறு மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளார் ரேகா குப்தா. 1996 முதல் 1997 வரை டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் (DUSU) தலைவராக இருந்துள்ளார் ரேகா. மாணவர் நலன் மற்றும் இளைஞர் அதிகாரம் போன்றவற்றில் தீவிரமாக ஈடுபட்டு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். கல்லூரியில் மாணவர் அணியின் செயல்பாடுகளுக்கு பிறகு நகராட்சி அரசியலில் நுழைந்தார் ரேகா. 2007 மற்றும் 2012ல் உத்தரி பிடம்புரா வார்டு கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கவுன்சிலராக இருந்த சமயத்தில் மக்கள் பணிகளில் அதிகம் கவனம் செலுத்தி பெயர் பெற்றார்.
பாஜகவில் சேர்ந்த பிறகு பல்வேறு முக்கிய பொறுப்புகளில் இருந்துள்ளார் ரேகா குப்தா. வடக்கு தில்லியில் மேயராகவும் பணியாற்றி உள்ளார். முதலில் பாஜக டெல்லி மாநிலப் பிரிவின் பொதுச் செயலாளராக இருந்த அவர், தற்போது பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினராக உள்ளார்.
கடந்த இரண்டு சட்டமன்றத் தேர்தல்களிலும் ஷாலிமார் பாக் தொகுதியில் ரேகா குப்தா தோல்வியடைந்தார். 2015 ஆம் ஆண்டு, ரேகா குப்தா, வந்தனா குமாரியால் சுமார் 11 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டார். இந்தத் தேர்தலில், ரேகா குப்தா, வந்தனா குமாரியை மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்.
ரேகா குப்தா ஹரியானாவின் ஜிந்தைச் சேர்ந்தவர். ஜிந்தின் ஜூலானா பகுதியில் மூதாதையர் கிராமமான நந்த்கர் உள்ளது. ரேகாவின் தந்தை ஜெய் பகவானுக்கு டெல்லியில் வேலை கிடைத்ததால், முழு குடும்பமும் டெல்லிக்கு குடிபெயர்ந்தது. ரேகா குப்தா பட்டப்படிப்பு வரை டெல்லியில் மட்டுமே படித்தார். ரேகா குப்தா 1998 ஆம் ஆண்டு மனிஷ் குப்தாவை மணந்தார். மனிஷ் குப்தா உதிரி பாகங்கள் வியாபாரம் செய்கிறார்.
டெல்லி சட்டமன்றம் 2025 தேர்தலின் போது தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தின்படி, ரேகா குப்தாவின் நிகர மதிப்பு சுமார் ரூ.5.3 கோடி. அவரது வருமான ஆதாரம் வழக்கறிஞர் தொழில் மற்றும் அரசியல் வாழ்க்கை. ரேகா குப்தாவின் வங்கிக் கணக்கில் ரூ.1,48,000 ரொக்கமும், ரூ.22 லட்சத்து 42 ஆயிரத்து 242 டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இது தவிர, அவருக்கு பல நிறுவனங்களில் பங்குகளும் உள்ளன.
ரேகா குப்தாவும் அவரது கணவரும் ரூ.53 லட்சத்து 68 ஆயிரத்து 323 மதிப்புள்ள ஆயுள் காப்பீட்டுக் கொள்கையை வைத்துள்ளனர். ரேகா குப்தாவுக்கு சொந்தமாக கார் இல்லை. அவரது கணவர் பெயரில் ஒரு மாருதி XL6 (2020 மாடல்) கார் உள்ளது. ரேகா குப்தாவுக்கு டெல்லியின் ரோஹினியில் லட்சக்கணக்கில் மதிப்புள்ள ஒரு வீடு உள்ளது.
டெல்லியின் முதலமைச்சர் வேட்பாளர்களில் முக்கியமான ஒருவராக ரேகா குப்தா பார்க்கப்பட்டார். மாணவர் அணி தலைவர் முதல் பாஜவில் முக்கிய பொறுப்புகள் வரை அனைத்தையும் சிறப்பாக கையாண்டுள்ளார். தனது பொதுசேவைகள் மூலம் மக்களை அதிகம் கவர்ந்துள்ளார் ரேகா குப்தா. டெல்லியில் சுஷ்மா ஸ்வராஜ் (பாஜக), ஷீலா தீட்சித் (காங்கிரஸ்) மற்றும் அதிஷி (ஏஏபி) ஆகியோருக்குப் பிறகு டெல்லியின் பெண் முதல்வராக ரேகா குப்தா பதவியேற்க உள்ளார். தற்போது நாட்டின் 2வது பெண் முதல்வராகவும் ரேகா குப்தா உள்ளார். ஏற்கனவே மேற்குவங்க முதல்வராக மம்தா பானர்ஜி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில், டெல்லி புதிய அரசாங்கத்தின் முதலமைச்சரின் பதவியேற்பு விழா பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புதிய முதலமைச்சரின் பதவியேற்பு விழா 2025 பிப்ரவரி 20 வியாழக்கிழமை டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் நண்பகல் 12 மணியளவில் நடைபெறவுள்ளது. பாரதிய ஜனதா கட்சி (பாஜக) ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் உட்பட பாஜகவின் உயர்மட்டத் தலைவர்கள் இதில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. “25,000 க்கும் மேற்பட்ட போலீசாரும், 15 க்கும் மேற்பட்ட துணை ராணுவப் படையினரும் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
Readmore: மக்கள் அச்சம்..! இன்று முதல் எப்போது வேண்டுமானாலும் அரசு பேருந்து ஓட்டுநர்கள் ஸ்டிரைக்…!