மார்ச் 8ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்ட நிலையில், அன்றைய தினம் தமிழ்நாடு அரசின் சார்பில் பெண்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அந்த வகையில், சமூக நலத்துறை மற்றும் மகளிர் மேம்பாட்டுத் துறை சார்பில் கடந்த ஆண்டு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்ட மகளிர் ‘பிங்க் ஆட்டோ’ திட்டத்தை சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் முதல்வர் முக.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
முதற்கட்டமாக 100 பயனாளிகளுக்கு முதல்வர் ஆட்டோக்களை வழங்கினார். இந்நிலையில், 2ஆம் கட்டமாக தற்போது விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதன்படி, 20 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்ட ஓட்டுநர் உரிமம் பெற்ற, சென்னையை சேர்ந்த பெண்கள் பிங்க் ஆட்டோ திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சென்னை மாவட்ட சமூகநல அலுவலர், 8-வது தளம், சிங்காரவேலர் மாளிகை, சென்னை -600001 என்ற முகவரிக்கு ஏப்.6ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுப்பாடுகள் என்னென்ன..?
பிங்க் ஆட்டோ திட்டத்தின் கீழ் பெண்களே உரிமையாளராகவும், ஓட்டுநராகவும் இருக்க வேண்டும். இந்த ஆட்டோக்களை ஓட்டும் பெண்கள் பிங்க் நிற சீருடை அணிந்திருக்க வேண்டும். ஆட்டோவுக்கு முழுமையாக பிங்க் நிறம் பூசப்பட வேண்டும். அவசர காலங்களில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கும் வகையில் வாகனத்தின் இருப்பிடத்தை கண்டறியும் கருவிகள் (ஜிபிஎஸ், விஎல்டிடி) பொருத்தப்பட்டிருக்க வேண்டும். ஆட்டோவுக்கான உரிமத்தை 5 ஆண்டுகள் வரை பெயர் மாற்றம் செய்ய முடியாது.