கேரளாவில் 2 பள்ளி மாணவர்களுக்கு அதிவேகமாக பரவும் நோரோவைரஸ் பாதிப்பு உறுதியாகி உள்ளது..
இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், கேரளாவில் நோரோவைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.. கொச்சியில் உள்ள காக்கநாடு என்ற பகுதியில் உள்ள பள்ளியில் 1ம் வகுப்பு மாணவர்கள் இருவருக்கு இந்த வைரஸ் பாதிப்பு பதிவாகி உள்ளது. இதனை தொடர்ந்து நோய் பரவாமல் தடுக்க மாவட்ட சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அந்த பள்ளிக்கு 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தின் மூத்த மருத்துவ அதிகாரி ஒருவர் பேசிய போது, பள்ளியின் 62 மாணவர்கள் மற்றும் சில பெற்றோர்களுக்கு நோரோவைரஸ் அறிகுறிகள் உள்ளது.. அதைத் தொடர்ந்து அவர்களின் மாதிரிகள் மாநில பொது ஆய்வகத்திற்கு சோதனைக்கு அனுப்பப்பட்டன..” என்று தெரிவித்தார்..
முன்னர் நோர்வாக் வைரஸ் என்று அழைக்கப்பட்ட நோரோவைரஸ், 1929 ஆம் ஆண்டில் நோர்வாக்கில் முதன்முதலில் கண்டறியப்பட்டது. இந்த வைரஸால் ஏற்படும் இரைப்பை குடல் நோய் ஆரம்பத்தில் “குளிர்கால வாந்தி நோய்” என்று அழைக்கப்பட்டது. இது மிகவும் வேகமாக பரவும் தொற்று நோயாகும்.. உலக சுகாதார மையத்தின் கூற்றுப்படி, உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் 685 மில்லியன் பேர் நோரோவைரஸால் பாதிக்கப்படுகின்றனர்.. குறிப்பாக 5 வயதுக்குட்பட்ட அதிகம் பாதிக்கப்படுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன..
வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவை நோரோவைரஸின் முதன்மையான அறிகுறிகளாகும். வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட கொண்ட ஒன்று அல்லது இரண்டு நாட்களில் இந்த அறிகுறிகள் தோன்றும். இதுதவிர குமட்டல், வயிற்று வலி, காய்ச்சல், தலைவலி மற்றும் உடல் வலி ஆகியவற்றை அனுபவிக்கலாம். நோய் தீவிரமடைந்தால் நீரிழப்பு ஏற்படலாம்.
நோரோவைரஸ் எப்படி பரவுகிறது..? அசுத்தமான உணவு, நீர் மற்றும் அசுத்தமான இடங்கள் மூலம் வைரஸ் பரவுகிறது.. இந்த வைரஸ் வாய்வழி அல்லது மலம் வழியாக உடலில் நுழைகிறது. பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பு மூலம் அல்லது அசுத்தமான மேற்பரப்புகளைத் தொடுவதன் மூலம் அல்லது அசுத்தமான நீர் மூலமாகவும் பரவுகிறது. பொதுவாக இந்த வைரஸ் எல்லா வயதினரையும் பாதிக்கக்கூடியது.. கப்பல்கள், முதியோர் இல்லங்கள், தங்குமிடங்கள் மற்றும் பிற மூடப்பட்ட இடங்களில் இந்த நோய் பரவுகிறது.