சென்னை ராயப்பேட்டை காவல்நிலையத்தில் எடப்பாடி பழனிசாமி, சி.வி.சண்முகம், மாவட்ட செயலாளர், மேலாளர்கள் மீது ஓபிஎஸ் ஆதரவாளர் ஜே.சி.டி.பிரபாகர் புகார் அளித்துள்ளார்.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் ராயப்பேட்டை காவல் நிலையத்தில், அதிமுக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அசல் பத்திரங்கள் மற்றும் 34 ஆயிரம் ரூபாய் ரொக்கம், மேலும் சில ஆவணங்களை காணவில்லை என புகார் அளித்திருந்தார். கடந்த 11ஆம் தேதி நடைபெற்ற வன்முறை போது ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் இதை எடுத்துச் சென்றதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டு புகார் கொடுத்திருந்தார்.

இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் ஜே.சி.டி.பிரபாகர் அதே ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், ”அதிமுக தலைமை அலுவலகத்தை சேதம் ஏற்படுத்த தூண்டிய எடப்பாடி பழனிசாமி, சி.வி.சண்முகம் மற்றும் மாவட்ட செயலாளர்கள் தி.நகர் சத்தியா, ஆதிராஜாராம், விருகை வி.என்.ரவி, வேளச்சேரி அசோக் மற்றும் மேலாளர்கள் மகாலிங்கம், மனோகரன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா காலத்திலேயே அசல் பத்திரங்கள் தலைமை அலுவலகத்தில் வைப்பதில்லை.
மேலும், முத்துராமலிங்க தேவரின் தங்க கவசம், பாதுகாப்பு ஆவணங்கள் எப்போதும் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தேவரின் வாரிசு இருவரும் இணைந்தே பயன்படுத்துவார்கள். அது எப்போதும் பன்னீர்செல்வத்திடமே இருக்கும். ஆகையால், ஏற்கனவே எங்கள் மீது கொடுக்கப்பட்டுள்ள புகாரில் உண்மையில்லை” என குறிப்பிட்டுள்ளார்.