இந்தியாவில் தன்னுடைய முதல் தயாரிப்பை விற்பனைக்குக் கொண்டு வரும் முயற்சியில் ஐ-கோவைஸ் மொபிலிட்டி (iGowise Mobility) நிறுவனம் மிக தீவிரமாகக் களமிறங்கி இருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக ஓர் புதிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது. நிறுவனம் அதன் முதல் வாகனத்தை தயாரிப்பதற்கான அனுமதி கோரி அரசிடம் விண்ணப்பித்து இருப்பதாக அந்த தகவல்கள் கூறுகின்றன. ஐ-கோவைஸ் மொபிலிட்டி நிறுவனம் தன்னுடைய முதல் தயாரிப்பாக இ-பைக் ரக பெய்கோ எக்ஸ்4 (BeiGo X4) மாடலையே தயாரித்து வருகின்றது. இது ஓர் எலெக்ட்ரிக் டூ-வீலர் ஆகும். இதனை நிறுவனம் இருசக்கர வாகனங்களின் எஸ்யூவி என குறிப்பிடுகின்றது. இதற்கேற்ப அதிக இட வசதிக் கொண்டதாகவும், சிறப்பு அம்சங்களை அதிகம் கொண்டதாகவும் பெய்கோ எக்ஸ்4 தயார் செய்யப்பட்டு இருக்கின்றது.
அந்தவகையில், பல்வேறு புதிய அம்சங்களை இந்த வாகனத்தில் வழங்கப்பட்டு இருப்பதை நம்மால் அறிய முடிகின்றது. குறிப்பாக, மூன்று சக்கரங்கள் கொண்ட வாகனமாக பெய்கோ எக்ஸ்4 உருவாக்கப்பட்டு இருக்கின்றது. இதனால், சைடு மற்றும் சென்டர் என எந்த ஸ்டாண்டும் தேவைப்படா வாகனமாக பெய்கோ எக்ஸ்4 மாறி இருக்கின்றது. 150 நிமிடங்களிலேயே முழுமையாக சார்ஜாகும் திறன், முழு சார்ஜில் 120 கிமீ ரேஞ்ஜ் தரும் பேட்டரி பேக், 60 லிட்டர் ஸ்டோரேஜ், மூன்று வீல்களிலும் டிஸ்க் பிரேக், காம்பி பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்களும் எக்ஸ்4-இல் சேர்க்கப்பட்டு இருக்கின்றன. இதுமட்டுமின்றி, ஹோண்டா ஆக்டிவாவை போல மெட்டல் பாடி பேனல்கள் கொண்ட வாகனமாகவும் பெய்கோ எக்ஸ்4 உருவாக்கப்பட்டு இருக்கின்றது. இத்தகைய வாகனத்தை தயாரிப்பதற்கான அனுமதியை கோரியே அரசாங்கத்திடம் ஐ-கோவைஸ் மொபிலிட்டி நிறுவனம் விண்ணப்பித்து இருக்கின்றது. இதற்கு அனுமதி வழங்கப்படும்பட்சத்தில் அடுத்த சில தினங்களிலேயே பெய்கோ எக்ஸ்4-இன் உற்பத்தி பணிகள் தொடங்கப்படும். கான்செப்ட்டாக அறிமுகம் செய்யப்பட்ட அடுத்த 9 மாதங்களிலேயே இந்த வாகனம் உற்பத்திக்கு தயாராகி இருப்பது கூடுதல் சிறப்பு தகவலாக இருக்கின்றது. இந்த தகவல் ஒட்டுமொத்த வாகன உலகையும் ஆச்சரியத்தில் மூழ்க செய்திருக்கின்றது.