இருசக்கர வாகனத்தில் கர்ப்பமான மனைவியுடன் மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தபோது அபராதம் செலுத்தச்சொல்லி போலீஸ் ஒருவர் கட்டாயப்படுத்தியதால் கர்ப்பிணி பரிதவிக்கும் நிலை ஏற்பட்டது.
புதுச்சேரியில் ஜிப்மர் மருத்துவமனைக்கு தனது மனைவியை அழைத்துக் கொண்டு இளைஞர் ஒருவர் சென்று கொண்டிருந்தார். அப்போது வாகனத்தில் 3 பேர் வந்ததாக கூறி அபராதம் கேட்டுள்ளார். தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை எனக்கூறியும் அவர் கேட்கவில்லை. நாங்கள் அவசரமாக ஜிப்மர் மருத்துவமனைக்கு செல்கின்றோம். எனது உறவுக்கார பெண்மணி உதவி கேட்டதால் அவரை அழைத்துவந்தேன். விட்டுவிடுங்கள் என கெஞ்சி உள்ளார்.
அப்போதும் அவர் மனம் இறங்கவில்லை. ஒரு மணி நேரத்திற்கும் மேல் கர்ப்பிணி சாலையில் நின்று கொண்டிருந்த நிலையில் கணவர் என்ன கூறியும் போலீஸ் செவிமடுக்கவில்லை. இதையடுத்து பொதுமக்கள் தலையிட்டு இவ்வளவு கேட்கின்றார். நீங்கள் இப்படி செய்தால் நியாயமா என கேட்டனர்.
அந்த பக்கமாக அதிமுக போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. இதனால், பத்திரிகையாளர்களும் இருந்தனர். இந்த பிரச்சனையை பார்த்த பத்திரிகையாளர்கள் என்ன பிரச்சனை என கேட்கத் தொடங்கினர். பின்னர் எஸ்.ஐ.-யிடம் கேள்வி கேட்டனர். இதையடுத்து எஸ்.ஐ. சாவியை திருப்பிக் கொடுத்தார். இதையடுத்து மனைவியுடன் அவர் ஜிப்மர் மருத்துவமனைக்கு சென்றார்.