சதாப்தி ரயிலில் பயணித்த பயணி ஒருவர் 20 ரூபாய் தேநீரை 70 ரூபாய் செலுத்தி அருந்தி அதற்கான ரசீதை அவர் சமூக வலைதளத்திலும் பகிர்ந்துள்ளார். அந்த பயணி, கடந்த 28-ஆம் தேதி டெல்லி – போபால் தடத்தில் இயங்கும் சதாப்தி ரயிலில் பயணித்துள்ளார். காலை நேரம் என்பதால் அவர் தேநீர் ஆர்டர் செய்துள்ளார். அதற்கான விலையை பார்த்ததும் அவர் அதிர்ச்சிடையந்துள்ளார்.. ஆம்.. அதில் தேநீரின் விலை ரூ.20 என்றும், சேவை கட்டணம் ரூ.50 எனவும், மொத்தமாக ரூ.70 எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான கட்டணத்தை அவர் செலுத்தி உள்ளார்.
எனினும் அதை அப்படியே தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.. மேலும் அவரின் பதிவில் “ 20 ரூபாய் தேநீருக்கு 50 ரூபாய் வரி, நாட்டின் பொருளாதாரம் உண்மையாகவே மாறிவிட்டது, இதுவரை வரலாறு மட்டுமே மாறி இருந்தது..!” என்று குறிப்பிட்டுள்ளார்..
இந்நிலையில், அதற்கு ரயில்வே தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. பொதுவாக சதாப்தி எக்ஸ்பிரஸ் மற்றும் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் போன்ற பிரீமியம் ரயில்களில், உணவு, பானம் போன்ற சேவைகளுக்கான விலை டிக்கெட்டின் விலையுடன் வருகின்றன. இருப்பினும், பயணிகள் ரயிலில் உணவைப் பெறுவதையும் அதற்குப் பதிலாக வாங்குவதையும் தவிர்க்கலாம். எனினும் உணவை ஆர்டர் செய்ய பயணிகள் ரூ.50 சேவைக் கட்டணமாக செலுத்த வேண்டும்..
ராஜ்தானி, சதாப்தி போன்ற ரயில்களில் பயணம் செய்யும் பயணிகள் டிக்கெட்டை முன்பதிவு செய்யும் போது உணவை முன்பதிவு செய்யவில்லை எனில் அதற்கு சேவை கட்டணம் ரூ.50 வசூலிக்கப்படும். அது தேநீர், காபி, உணவு என அனைத்திற்கும் பொருந்தும் என தெரிவித்துள்ளது ரயில்வே. மற்றபடி பயணியிடமிருந்து கூடுதல் கட்டணம் ஏதும் வசூல் செய்யவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.