உத்தரப்பிரதேசத்தில் சுமார் ரூ.15 ஆயிரம் கோடி செலவில் அமைக்கப்பட்டு, பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்ட பந்தல்கண்ட் அதிவிரைவு சாலையில் நான்கே நாட்களில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டது சர்ச்சையாகி உள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் சித்ரகூட் நகரில் இருந்து தலைநகர் டெல்லியை இணைக்கும் வகையில், ரூ.14,850 கோடி மதிப்பீட்டில் பந்தல்கண்ட் அதிவிரைவு சாலை அமைக்கப்பட்டது. இதனை கடந்த 17ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்து போக்குவரத்துக்காக அர்ப்பணித்தார். இந்நிலையில், சாலை பயன்பாட்டிற்கு வந்து நான்கே நாட்களில் சிலம்பூர் என்ற பகுதியில் சாலையின் குறுக்கே மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. அதிவிரைவு சாலை சேதம் அடைந்துள்ள காட்சிகள் சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்படுகின்றன.
ஒப்பந்த பணிகளில் ஊழல் காரணமாக உத்தரப்பிரதேசத்தில் இரட்டை எஞ்சின் சேதம் அடைந்துள்ளதாக எதிர்க்கட்சியான சமாஜ்வாதி விமர்சித்துள்ளது. சாலைப் பணிகள் முழுமையாக நிறைவடையாத நிலையில், அதனை திறந்து வைத்து மக்களின் உயிரோடு விளையாடியதற்கு யோகி அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அக்கட்சி வலியுறுத்தியுள்ளது. இதற்கிடையே, கனமழை காரணமாகவே தண்ணீர் தேங்கி சாலையில் சேதம் ஏற்பட்டதாக மாநில விரைவு சாலை மேம்பாட்டு ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.