மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணையமைச்சர் ஷோபா கரன்லாஜே செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பிரதமரின் கரிப் கல்யாண் அன்ன யோஜனா எனப்படும் பிரதமரின் ஏழைகள் நலவாழ்வு திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படுவதை நீட்டிப்பது குறித்து பிரதமர் அறிவிப்பார்.
வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை மக்களுக்கு இந்தத் திட்டத்தில் இலவசமாக உணவு தானியங்கள் வழங்குவது இம்மாதத்துடன் நிறைவடைய இருக்கிறது. இந்நிலையில், மத்திய அரசின் கையிருப்பில் போதிய உணவு தானியங்கள் சேமித்து வைக்கப்பட்டு உள்ளது. உணவு பாதுகாப்பு சட்டத்தை உறுதி செய்ய ஏதுவாக, மற்ற நலத்திட்டங்களின் கீழ் வழங்க தேவையான உணவு தானியங்களும் கையிருப்பு வைக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.
பொதுவிநியோகத் திட்டத்தை நவீனத் தொழில்நுட்பங்கள் மூலம் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், உணவு தானியங்களின் கழிவுகளை ஆய்வு செய்யவும், கொள்முதல் செய்யப்படும் உணவு தானியங்களுக்கான ஆதரவு விலையை விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகவும் அவர் கூறினார். 2023-ம் ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாக கொண்டாடப்பட உள்ளதாக கூறினார்.