தக்காளி விலை உயர்வானது தமிழ்நாட்டில் மட்டுமின்றி நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் ஏற்பட்டுள்ளது. கிலோ 10-20 ரூபாய்க்கு விற்பனையான தக்காளி, தற்போது 80-100 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. சில இடங்களில் விலை 100-ஐ தாண்டி விற்பனையாகிறது. இந்த விலை உயர்வால் நடுத்தர, ஏழை மக்கள் பெரும் பாதிப்பை கண்டுள்ளதாக பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்த விலை உயர்வுக்கு இயற்கை சூழல்களே காரணம் என தெரிவிக்கப்படுகிறது. நாட்டில் ஒருபுறம் தீவிர பருவ மழையும், மறுபுறும் வெப்ப காற்றும் வீசி வருகிறது. குஜராத், ராஜஸ்தான் பகுதிகளில் பைபர்ஜாய் புயல் காரணமாக ஏற்பட்ட தொடர் மழையால் தக்காளி சாகுபடி பெரும் பாதிப்பை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல, கடந்த சில ஆண்டுகளாக ஏற்பட்ட கசப்பான அனுபவம் காரணமாக விவசாயிகள் குறைவான அளவே தக்காளி சாகுபடியை செய்துள்ளனர். பீன்ஸ்சுக்கான கொள்முதல் விலை அதிகம் இருப்பதால், இந்தாண்டு விவசாயிகள் அதிக அளவில் பீன்ஸ் சாகுபடியில் ஈடுபட்டனர்.
எனவே, குறைவான மகசூலுடன் மழை, வெப்பம் காரணமாக பயிர் சேதம் என அனைத்து சூழல்களும் ஒன்றிணைந்து விலை உயர்வுக்கு காரணமாக அமைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் மொத்த விற்பனை சந்தையில் தக்காளி கிலோ 80-90 ரூபாய்க்கும், சில்லரை அங்காடிகளில் 100 ரூபாய்க்கு மேல் விற்பனையாகிறது. எனவே, சராசரியாக ஒரு கிலோ வாங்கும் வாடிக்கையாளர்கள் தற்போது கால் கிலோ தான் வங்கி செல்வதாக கூறப்படுகிறது.
தக்காளி விலை உயர்வு குறித்து நுகர்வோர் விவகாரத்துறை செயலாளர் ரோகித் குமார் சிங் கூறுகையில், ”இந்த விலை உயர்வு பருவத்தால் ஏற்பட்ட தற்காலிக பிரச்சனை. மேலும், திடீர் மழை வெள்ளம் காரணமாக சந்தைகளில் வரத்து குறைந்துள்ளது. விரைவில் இந்த பிரச்சனை தீர்ந்து விலை இயல்பான நிலைக்கு வரும்” என்று தெரிவித்துள்ளார்.