சேலம் மாவட்டத்தில் 2024-2025 ஆம் நிதியாண்டிற்கான வரியினங்கள் மற்றும் கட்டணங்களை எதிர்வரும் 28.2.2025 -ம் தேதிக்குள் பொதுமக்கள் கிராம ஊராட்சி மன்ற அலுவலகம் அல்லது இணையதளம் வாயிலாக செலுத்தலாம்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; சேலம் மாவட்டத்தில் உள்ள 20 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 385 கிராம ஊராட்சிகளில் சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி வரியில்லா வருவாய் மற்றும் இதர கட்டணங்கள் போன்றவற்றினை vptax.tnrd.tn.gov.in இணையதளம் வாயிலாக வசூல் செய்யப்பட்டு வருகிறது. 2024-2025 ஆம் நிதியாண்டிற்கான வரியினங்கள் மற்றும் கட்டணங்களை எதிர்வரும் 28.2.2025 -ம் தேதிக்குள் பொதுமக்கள் கிராம ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு நேரில் சென்றோ அல்லது vptax.tnrd.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாகவோ செலுத்த வேண்டும்.
மேலும், ரொக்க பணபரிவர்த்தனை. கையடக்க கருவி (Point of Sale Machine) UPI (GPay/PhonePe, etc.) Credit/Debit Cards பணப் பரிவர்த்தனை மூலம் கிராம ஊராட்சி மன்ற நிர்வாகத்தினால் வரி வசூல் செய்யப்பட்டு வருகிறது. அதேபோன்று vptax.tnrd.tn.gov.in இணையதளத்திற்கு சென்று விரைவாக வரி செலுத்த” என்ற மெனுவின் மூலம் உரிய விவரங்களை உள்ளிட்டு தாமாகவே இணையதள பரிவர்த்தனை பணம் செலுத்தி இரசீதினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.