நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 20 காசுகள் குறைந்து ரூ.4.45 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு சுமார் 6 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
மேலும் தமிழ்நாடு அரசின் சத்துணவு திட்டத்திற்கும், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றன. மேலும், நாமக்கல்லில் இருந்து முட்டைகள் மஸ்கட், துபாய், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ) போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
நாமக்கல்லில் உள்ள தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு (என்இசிசி) நாள்தோறும் கொள்முதல் விலையை நிர்ணயித்து, வரத்து மற்றும் தேவையின் அடிப்படையில் முட்டையின் விலையை நிர்ணயம் செய்கிறது. அந்த வகையில், கடந்த இரண்டு வாரங்களாக முட்டை விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், இன்று குறைந்துள்ளது. இதனால் மாநிலத்தின் பிற பகுதிகளில் சில்லறை விலையில் 1 முட்டை ரூ.5 முதல் ரூ.5.50 வரை விற்பனையாகிறது. உற்பத்தி அதிகரிப்பு அதே நேரத்தில் நுகர்வு குறைவு காரணமாக விலை குறைக்கப்பட்டதாக வியாபார்கள் தெரிவித்துள்ளனர்.