கேரள மாநிலம் எங்கப்புழாவில் நடந்த ஒரு குடும்ப தகராறில் மனைவியை கணவனே கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட யாசிர் புதுப்பாடியை பூர்வீகமாகக் கொண்டவர். சம்பவத்தன்று, யாசிர் தனது மாமியார் வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர், திடீரென மனைவியை சரமாரியாக தாக்கினார்.
மனைவியின் தொண்டையிலும், காதுக்குப் பின்னாலும் கத்தியால் குத்தினார். இந்த சம்பவத்தில் அவரது மனைவி ஷிபிலா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். ஷிபிலாவின் தந்தை பி. அப்துர்ரஹ்மான் இந்த தாக்குதலை தடுக்க முயன்றபோது, அவரையும் யாசிர் தாக்கியுள்ளார். இதில், அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ஷிபிலாவின் தாயாருக்கும் வெட்டுக்காயம் ஏற்பட்டது.
இதையடுத்து, இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், மாமனார் அப்துர்ரஹ்மானின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளார்.
கொலைக்கு காரணம் என்ன..?
அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் படி, யாசிர் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர். அவர் போதையில் இருந்தபோது இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. ஷிபிலா முன்பு தாமரச்சேரி போலீசில் புகார் அளித்திருந்தார். யாசிர் தனது நகைகளை அடகு வைத்ததாகவும், தனது உடைமைகளை விற்றதாகவும், மீண்டும் மீண்டும் உடல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாகவும் புகாரளித்தார். மேலும், தன்னையும், தனது குழந்தையையும் வீட்டிலிருந்து வெளியேற்றியதாக தனது கணவர் மீது புகாரளித்துள்ளார். இந்நிலையில், கொலை சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.