நீட் தேர்வுக்கு எதிராக மத்திய அரசு அலட்சியம் காட்டினால் ஜல்லிக்கட்டுபோல் போராட்டத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.
50 நாட்கள் 50 லட்சம் கையெழுத்துக்கள் என்ற நோக்கில் ‘நீட் விலக்கு நம்
இலக்கு’ என்ற பெயரில் நீட் விலக்கை வலியுறுத்தி சென்னை கலைவாணர் அரங்கில்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாபெரும் கையெழுத்து இயக்கத்தை தொடங்கியுள்ளார். இதில் பேசிய அவர், ”எனக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர்கள் யாரும் நீட் எழுதவில்லை. ஆனால்,
அவர்களை நம்பித்தான் நான் எனது கண்களைப் பரிசோதித்து வந்துள்ளேன்.
எதிர்கட்சியாக இருந்தபோது மக்கள் மன்றத்தில் போராடினோம். ஆளுங்கட்சியாகிய பிறகு சட்டமன்றத்தில் போராடி வருகிறோம். நீட் தேர்வால், அனிதா முதல் ஜெகதீஸ் வரை 22 நபர்கள் இறந்துள்ளனர். திமுக நடத்தும் இந்த நீட் விலக்கு கையெழுத்து இயக்கத்தை நாம் மாபெரும் மக்கள் இயக்கமாக மாற்றி அதன் மூலம் நீட் தேர்வை ஒழித்தாக வேண்டும்.
நீட் தேர்வு வந்தால் தரமான டாக்டர்கள் கிடைப்பார்கள் என்று மத்திய அரசு சொன்னது. மெடிக்கல் காலேஜில் பணம் வாங்கிட்டு சீட் கொடுக்க மாட்டார்கள் என்று சொன்னார்கள். ஆனால், இப்ப என்ன நடந்துட்டுருக்கு தெரியுமா? முதுகலை நீட் படிக்க முட்டை பெர்செண்டைல் எடுத்தா போதும் மெடிக்கல் காலேஜில் சேர்ந்துவிடலாம் என முட்டையைக் காட்டி விமர்சனம் செய்தார் உதயநிதி. சும்மா போய் நீட் எழுதிட்டு வந்தாலே போதும் பணம் கொடுத்து சீட் வாங்கிடலாம்.. இதெல்லாம் எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம் தெரியுமா? எந்த ஊர்லயாவது இப்படி நடக்குமா? நீட் ஒழிப்பிற்காக பெறப்படும் இந்த கையெழுத்துக்கள் அனைத்தும் டிசம்பரில் நடைபெறும் இளைஞரணி மாநாட்டில் முதல்வரிடம் ஒப்படைக்கப்பட்டு, குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்படும்” என்று தெரிவித்தார்.