fbpx

எங்களுக்கு நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்!… ஆனால் அது நீதிமன்றத்தில்! சாலையில் அல்ல!… மல்யுத்த வீராங்கனைகள்!

பிரிஜ் பூஷன் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஐந்து மாதங்களுக்கு மேலாக போராடி வந்த மல்யுத்த வீரர் வீராங்கனைகள் திடீரென போராட்டத்தைக் கைவிட்டுள்ளனர்.

இந்தியாவின் புகழ்பெற்ற மல்யுத்த வீராங்கனைகள் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் மீது பாலியல் துன்புறுத்தல் புகார் கூறி போராட்டம் நடத்தி வந்தனர். இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்தப் போராட்டம் ஐந்து மாதங்களுக்குப் பிறகு, முடிவுக்கு வந்துள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டிருந்த முன்னணி மல்யுத்த வீராங்கனைகள் வினேஷ் போகத், சாக்‌ஷி மாலிக் மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோர் இந்தத் தகவலை ட்விட்டரில் அறிவித்துள்ளனர். ஆளும் பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரிஜ் பூஷன் ஷரண் சிங்குக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் வாக்குறுதியை அரசாங்கம் நிறைவேற்றியதை அடுத்து இந்த அறிவிப்பு வந்துள்ளது.

“இந்த வழக்கில், எங்களுக்கு நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும். ஆனால் அந்தப் போராட்டம் நீதிமன்றத்தில் இருக்கும். சாலையில் அல்ல” என்று ட்விட்டரில் கூறியுள்ளனர். “இந்திய மல்யுத்த சம்மேளனத்தில் சீர்திருத்தம் செய்து குறித்து வாக்குறுதி அளித்தபடி, தேர்தல் பணிகள் தொடங்கியுள்ளன. ஜூலை 11ஆம் தேதி தேர்தல் நடத்துவது தொடர்பாக அளித்த வாக்குறுதிகளை அரசு நிறைவேற்றும் எனக் காத்திருப்போம்” என்றும் தெரிவித்துள்ளனர். அறிக்கையை வெளியிட்ட சில நிமிடங்களில், விக்னேஷ் போகத் மற்றும் சாக்‌ஷி மாலிக் சிறிது காலத்திற்கு சமூக ஊடகங்களில் இருந்து விலகி இருக்கப்போவதாகவும் ட்வீட் செய்துள்ளனர்.

பல பெண் மல்யுத்த வீராங்கனைகளின் புகார்களைத் தொடர்ந்து, இந்த மாத தொடக்கத்தில் பிரிஜ் பூஷன் மீது பாலியல் துன்புறுத்தல், கிரிமினல் மிரட்டல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மல்யுத்த சம்மேளனத்தின் நிர்வாகப் பொறுப்புகளில் இருந்தும் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். ஆனால், பிரிஜ் பூஷன் தொடர்ந்து தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் நிராகரித்து வருகிறார். குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், விசாரணைக்கு பிரிஜ் பூஷன் முழு ஒத்துழைப்பு கொடுப்பார் எனவும் நீதிமன்றத்தின் முடிவை மதிப்பார் எனவும் அவரது உதவியாளர் ஒருவர் கூறியுள்ளார்.

Kokila

Next Post

13வது ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர்!... நாளை அட்டவணை அறிவிப்பு!

Mon Jun 26 , 2023
13வது ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணை வரும் 27 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் வரும் அக்டோபர் மாதம் தொடங்குகிறது. இந்த தொடரை இந்தியா நடத்துவதால், இந்தியா நேரடியாக இந்த தொடருக்கு தகுதி பெற்றுள்ளது. இந்தியா தவிர, இங்கிலாந்து, வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 8 அணிகளும் தகுதி பெற்றுள்ளன. இதையடுத்து […]

You May Like