கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் அருகே வீட்டு வசதி வாரிய குடியிருப்பு உள்ளது. இந்த பகுதியில் 1700-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு வசித்து வருபவர் மோகன் (47). இவர், மாநகராட்சி ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மகள் தாரணி (17). இவர் அதே பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உதவிபெறும் பள்ளியில் பிளஸ்2 படித்து வந்தார். இந்நிலையில், நேற்று பொதுத்தேர்வு ஹால்டிக்கெட் பெற்று கொண்டு வீட்டுக்கு வந்த மாணவி, இரவு 9 மணியளவில் 13-வது மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார்.
இதில், ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மாணவியை, அங்கிருந்தவர்கள் மீட்டு கங்கா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவர் பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர், இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அங்கு விரைந்த போலீசார், மாணவி தாரணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேர்வுக்கு பயந்து மாணவி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.