சென்னையில் ஆசிரியர் திட்டியதால், 9ஆம் வகுப்பு மாணவன் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பாடியைச் சேர்ந்தவர்கள் சேகர்-செல்வி தம்பதியினர். இவர்களுக்கு கல்லூரியில் படிக்கும் வயதில் ஒரு மகனும், 9ஆம் வகுப்பு படிக்கும் பாரதி செல்வா என்ற மகனும் உள்ளனர். சேகரும், செல்வியும் அம்பத்தூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றனர். இவரது 2-வது மகன் பாடியில் உள்ள லட்சுமி மெட்ரிக் பள்ளியில் படித்து வந்துள்ளார். தம்பதிகள் இருவரும் வேலைக்கு செல்வதால் வீட்டின் பூட்டு சாவி அனைவரிடமுமே ஒவ்வொன்று இருக்கும்.

இந்நிலையில், நேற்று காலை 8.30 மணிக்கு வழக்கம் போல் சேகர் வீட்டை பூட்டி விட்டு செல்வாவை அவர் படிக்கும் பள்ளி அருகே விட்டுச் சென்றுள்ளார். அதன் பின் நேற்று மாலை சேகருக்கு தொலைபேசியில் அழைப்பு கொடுத்த அவரது மனைவி மகன் செல்வா தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டதாக தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர், இந்த சம்பவம் குறித்து கொரட்டூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவன் பாரதி செல்வாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தந்தை சேகர் அதன் பின் வீட்டிற்கு வந்து பாரதி செல்வா பயன்படுத்திய செல்போனை பார்த்த போது, அதில் 4 வீடியோ பதிவுகளும் இருந்தது. அந்த வீடியோவில் பாரதி செல்வா தன்னை ஆசிரியர்கள் அனைவரது முன்னிலையில் திட்டி அடிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், வீட்டுப்பாடம் செய்யாததால், தொடர்ந்து துன்புறுத்தி வந்தாகவும் தெரிவித்துள்ளார். பாரதி செல்வா பள்ளிக்கு செல்வது போல் பாவனை செய்துவிட்டு வீட்டில் வந்து வீடியோ பதிவிட்டு உயிரை மாய்த்துக் கொண்டது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவனின் உறவினர்கள் கொடுத்த அழுத்தத்தால் பள்ளி தலைமை ஆசிரியர் ஆட்கொண்டான் மற்றும் வகுப்பு ஆசிரியர் பிரசன்ன குமாரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்டையே, தனது மகனை துன்புறுத்திய ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவனின் தந்தை சேகர் கேட்டுக்கொண்டுள்ளார்.