லியோ திரைப்பட வெற்றி விழாவுக்கு காவல்துறை அனுமதி வழங்கியுள்ள நிலையில், சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது.
லியோ திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்நிலையில், படத்தின் வெற்றி விழா வரும் நவம்பர் 1ஆம் தேதி நேரு உள்விளையாட்டரங்கில் நடத்த படத்தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதன்படி, பெரியமேடு காவல் நிலையத்தில் படத்தயாரிப்பு நிறுவனம் அனுமதி கேட்டு கடிதம் அனுப்பியது. இந்நிகழ்ச்சியில் விஜய் கலந்து கொள்வதால் பாதுகாப்பும் கேட்கப்பட்டது.
இந்நிலையில், காவல்துறை படத்தயாரிப்பு நிறுவனத்திடம் கேள்வி எழுப்பினர். இந்த கடிதத்திற்கு காவல்துறை பதில் கடிதம் நேற்று அனுப்பியது. அதில் எத்தனை மணிக்கு தொடங்கி எத்தனை மணிக்கு முடியும், எவ்வளவு டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படவுள்ளன, காவல்துறை பாதுகாப்பு இல்லாமல் தனியார் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவா?
முக்கிய விருந்தினர்கள் யார் யார்? விழாவுக்கு 5000 பேருக்கு மிகாமல் இருக்க வேண்டும் என காவல்துறை கேள்விகளை எழுப்பி சில கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. இந்நிலையில் லியோ பட வெற்றி விழாவுக்கு காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. முறையான அனுமதி கடிதங்களுடன் விண்ணப்பித்ததால் காவல்துறை அனுமதி அளித்துள்ளது. நேரு உள்விளையாட்டரங்கில் மொத்தம் 8,000 இருக்கைகள் உள்ளன.
ஆனால், காவல்துறை 6,000 இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கியுள்ளது. பார்வையாளர்களுக்கு 5,500 இருக்கைகளும் விஐபிகளுக்கு 500 இருக்கைகளும் ஒதுக்கிக் கொள்ளலாம். அரங்கின் மைய பகுதியில் தேவைப்பட்டால் இருக்கைகளை அமைத்துக் கொள்ளலாம். நிகழ்ச்சி நடத்தும் நிறுவனம் வைப்புத் தொகையாக ரூ.10 லட்சம் செலுத்த வேண்டும்.