மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளது. இங்கு உள்ள கருத்தரங்கு அரங்கில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு பணியில் இருந்த முதுகலை பெண் பயிற்சி மருத்துவர் அரை நிர்வாண நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். அவரது உடலில் பலாத்கார காயங்கள் இருந்தன. பிரேதபரிசோதனையில் அவர் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த கொலை தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்தனர். பெண் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. நாட்டையே உலுக்கிய இந்த கொடூர சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினும் குரல் கொடுத்து வருகின்றனர். இந்த வழக்கை சிபிஐ அதிகாரிகள் 3 பிரிவுகளாக பிரிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். உச்சநீதிமன்றம் இச்சம்பவம் குறித்து தாமாக முன்வந்து வழக்கு விசாரணையை தொடங்கியுள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
நீதிபதிகள் கூறுகையில், “போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள் அவர்களது பணிக்குத் திரும்ப வேண்டும். மருத்துவர்கள் அவர்கள் பணிகளுக்குத் திரும்பியதும் அவர்களுக்கு எதிராக உயர் அதிகாரிகள் நடவடிக்கைகளை எதுவும் எடுக்க கூடாது என்றும், அவ்வாறு நடவடிக்கை எடுத்தால் அதில் நீதிமன்றம் தலையிடும்.” என்றும் நீதிபதி அமர்வு தெரிவித்தது. மேலும் மருத்துவர்கள் பணிக்குத் திரும்பவில்லை என்றால், பொது சுகாதார உள்கட்டமைப்பு எவ்வாறு செயல்படும்? என்றும் கேள்வி எழுப்பினர்.
மேலும், இயற்கைக்கு மாறான மரணம் என மேற்கு வங்க காவல்துறை வழக்குப்பதிவு செய்வதற்கு முன்பாகவே பயிற்சி பெண் மருத்துவரின் உடற்கூராய்வு நடத்தப்பட்டுள்ளது ஆச்சரியமாக இருக்கிறது. போலீசார் இவ்விவகாரத்தை கையாண்ட விதத்தை, நாங்கள் எங்கள் 30 ஆண்டுகால பணியில் எங்கும் பார்த்ததில்லை என்றும் உச்சநீதிமன்ற நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளனர்.
மேலும், ஆகஸ்ட் 15ஆம் தேதி ஆர்.ஜி கர் மருத்துவமனையில் போராட்டம் நடத்தியவர்கள் மீது நடத்தப்பட்ட காவல்துறை தடியடி சம்பவங்கள் குறித்து மேற்கு வங்க அரசு நிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, இந்த வழக்கு விசாரணையின் தற்போதைய நிலவரம் குறித்து இன்னும் 3 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று, சிபிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
Read more ; ‘எனக்கே தகவல் இல்லை..!!’ தமிழக அமைச்சரவை மாற்றம் குறித்து முதலமைச்சர் பதில்..!!