தந்தை பெரியாரின் பேரனும், சொல்லின் செல்வர் சம்பத்தின் அவர்களின் மகனும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ-வுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவுக் காரணமாக கடந்த மாதம் சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு நுரையீரல் சார்ந்த பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஒரு மாதத்திற்கு மேலாக செயற்கை சுவாச உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி ஈவிகேஎஸ் இளங்கோவன் உயிரிழந்தார். வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவால் அரசியலில் இருந்து சற்று ஒதுங்கி இருந்தார். ஆனால் அவரது மகன் திருமகன் ஈவேரா மறைவை அடுத்து, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வென்று 2023ல் மீண்டும் எம்.எல்.ஏ. ஆனார் ஈவிகேஎஸ் இளங்கோவன்.
ஈவிகேஎஸ் இளங்கோவனின் மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் பிரபலங்கள், தொண்டர்கள் உள்ளிட்ட பலர் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இதனைத்தொடர்ந்து மறைந்த ஈவிகேஎஸ். இளங்கோவன் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக சென்னை நந்தம்பாக்கம் அருகே உள்ள மணப்பாக்கம் வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு சென்று மக்கள் அரசியல் தலைவர்கள் என பலரும் தங்களுடைய அஞ்சலியை செலுத்தினார்கள்.
முகலிவாக்கம் எல் அண்டு டி காலனியில் உள்ள மின்மயானத்தில் மாலை 4 மணிக்கு அவரது உடல் தகனம் செய்யப்படுகிறது. இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ.வுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலுக்கு அரசு மரியாதை செய்ப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் “தமிழ்நாட்டு அரசியல் மட்டுமல்லாது இந்திய அரசியலிலும் சிறப்பாக மக்கள் பணியாற்றினார். அரசியல், மக்கள் பணி, பொது வாழ்வு என அனைத்து தளங்களிலும் நீண்ட அனுபவம் கொண்டவர். தன் சிந்தனைக்குச் சரியாகப் பட்டதை துணிவுடன் வெளிப்படுத்தியவர்.
அவரை இழந்து வாடும் குடும்ப உறுப்பினர்களுக்கும், காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களுக்கும், ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி மக்களுக்கும் தமிழ்நாடு அரசின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவரது பொது வாழ்வைப் போற்றும் விதமாக அவரது திருவுடலுக்கு அரசு மரியாதையுடன் பிரியாவிடை அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.