நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற விரும்பும் மாணவர்கள் மே மாதம் 13-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மத்திய அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் அதிக எண்ணிக்கையில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கில் “நான் முதல்வன்” பயிற்சி திட்டத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கடந்த ஆண்டு தொடங்கிவைத்தார். போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் சென்னை, சேலம், விருதுநகர் ஆகிய நகரங்களில் மாணவர்களுக்கு உணவு மற்றும் தங்கும் வசதியுடன் 6 மாத காலம் இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டு மத்திய அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற விரும்பும் மாணவர்கள் ttps://portal.naanmudhalvan.tn.gov.in/competitive_exams என்ற இணையதளத்தில் மே மாதம் 13-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. விரைவில் நான் முதல்வன் திட்டத்தின்கீழ் கோவை மற்றும் மதுரையிலும் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளை நடத்தவும் அரசு திட்டமிட்டுள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் முதல் கடந்த ஏப்ரல் மாதம் வரை நடைபெற்ற மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி), ரயில்வே, வங்கி பணியாளர் தேர்வுவாரியங்கள் நடத்திய தேர்வுகளில் நான் முதல்வன் திட்டத்தின்கீழ் பயிற்சி பெற்ற தமிழக மாணவர்கள் 58 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் முதல்வர் வெளியிட்ட பதிவில், “நாள்தோறும் சாதனைகள் படைக்கும் திராவிட மாடல் என்றேன்; இன்றைய சாதனை இது. நம் மாணவர்கள் மத்திய அரசின் போட்டித் தேர்வுகளில் இன்னும் நிறைய தேர்ச்சி பெற்று, உயர் பொறுப்புகளில் சாதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Read More: உங்கள் ரூபாய் நோட்டு கிழிஞ்சிருக்கா..? அதை மாற்ற கஷ்டப்படுறீங்களா..? ஈசியான வழி இதோ..!!