fbpx

தமிழகத்தில் உதயமாகிறது 13 புதிய நகராட்சிகள்..!! – தமிழக அரசு அரசாணை வெளியீடு 

தமிழகத்தில் 13 புதிய நகராட்சிகளை உருவாக்கவும், சென்னை மதுரை திருச்சி உள்ளிட்ட 16 மாநகராட்சிகளை விரிவாக்கம் செய்யவும் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியான அறிக்கையில், தமிழ்நாடு நகரமயமாதலில் இந்தியாவில் முன்னோடி மாநிலமாக உள்ளது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நகர்ப்புர மக்கள் தொகை 48.45 சதவீதமாகவும் தற்போது நகர்ப்புரங்களில் வாழும் மக்கள் தொகை சதவீதம் மேலும் உயர்ந்துள்ளது. எனவே, மாநிலத்தின் மிக வேகமான நகரமயமாக்கலை கருத்திற்கொண்டு, நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளை மறுசீரமைக்க வேண்டியதன் அவசியம் எழுகின்றது.

அரசு, நகரமயமாக்கலின் சவால்களை எதிர்கொள்ளும் வகையில், நகர்ப்புரத்தினை ஒட்டியுள்ள உள்ளாட்சி அமைப்புகளின் நகரமயமாக்கலின் தன்மையினை பொறுத்து, கிராம ஊராட்சிகளை மாநகராட்சி மற்றும் நகராட்சிகளுடன் இணைத்தும், பேரூராட்சிகளை நகராட்சிகளாகவும், நகராட்சிகளை மாநகராட்சிகளாகவும் தரம் உயர்த்துதல்/மறுசீரமைப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
இதன்படி, கடந்த 2021 ஆம் ஆண்டு 6 புதிய மாநகராட்சிகள் மற்றும்
28 நகராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

அதே போன்று, 10.08.2024 அன்று திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி மற்றும் புதுக்கோட்டை ஆகிய 4 மாநகராட்சிகள் அருகிலுள்ள 2 பேரூராட்சிகள் மற்றும் 46 ஊராட்சிகளை இணைத்து, அனைத்து சட்ட நடைமுறைகளை பின்பற்றி மாநகராட்சிகளாக அமைத்துருவாக்கியுள்ளது. மேலும், 12.08.2024 அன்று மாமல்லபுரம், ஸ்ரீபெரும்புதூர் மற்றும் திருவையாறு ஆகிய பேரூராட்சிகளை நகராட்சியாக அமைத்துருவாக்க உத்தேசமுடிவினை அறிவித்து அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்நிலையில், அரசு, நகரமயமாதலின் வீச்சு, நிர்வாகத் தேவைகள், மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை திறம்படவும், முழுஅளவிலும் வழங்குதல் (comprehensive manner), உள்ளாட்சிப் பகுதிகளின் எதிர்கால வளர்ச்சிக்கான தேவைகள் ஆகியவற்றை கருத்திற்கொண்டு, தகுதியான மேலும் பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளின் மறுசீரமைப்பை மேற்கொள்வதென முடிவு செய்துள்ளது.

தற்போது, 28 மாவட்டங்களில் உள்ள கிராம ஊராட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பதவிக்காலம் வரும் 05.01.2025ஆம் தேதியன்று நிறைவடைகிறது. இந்த மாவட்டங்களில் உள்ள நகர்ப்புரத்தன்மை வாய்ந்த ஊராட்சிகளை அருகிலுள்ள மாநகராட்சிகள், நகராட்சிகளுடன் இணைக்கவும். பேரூராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சிகளை இணைத்து நகராட்சியாக அமைத்துருவாக்கம் செய்திடவும் உள்ளாட்சி அமைப்புகளின் மறுசீரமைப்பு தொடர்பான உயர்நிலைக்குழு, மாவட்ட ஆட்சியர்களுடன் மேற்கொண்ட தொடர் ஆலோசனைகளின் அடிப்படையில், உரிய செயற்குறிப்புகள் பெறப்பட்டுள்ளன.

அரசு, இச்செயற்குறிப்புகளை பரிசீலித்து, பெருநகர சென்னை மாநகராட்சி, மதுரை, திருச்சிராப்பள்ளி உள்ளிட்ட 16 மாநகராட்சிகளுடன், 4 நகராட்சிகள், 5 பேரூராட்சிகள் மற்றும் 149 ஊராட்சிகளை இணைக்கவும், திருவாரூர், திருவள்ளுர், சிதம்பரம் உள்ளிட்ட 41 நகராட்சிகளுடன் 147 ஊராட்சிகள் மற்றும் 1 பேரூராட்சியை இணைக்கவும், பேரூராட்சிகளுடன் ஊராட்சிகளை இணைத்தும், தனித்தும் கன்னியாகுமரி, அரூர், பெருந்துறை உள்ளிட்ட புதிதாக 13 நகராட்சிகளை அமைத்துருவாக்கவும், கிராம ஊராட்சிகளை இணைத்து மற்றும் தனியாகவும் ஏற்காடு, காளையார்கோவில், திருமயம் உள்ளிட்ட புதிதாக 25 பேரூராட்சிகளை அமைத்துருவாக்கவும், 29 கிராம ஊராட்சிகளை 25 பேரூராட்சிகளுடன் இணைக்கவும் உத்தேச முடிவினை மேற்கொண்டுள்ளது.

இது தொடர்பாக தக்க சட்டவகைமுறைகளின் கீழ் ஆணைகள் வெளியிடப்பட்டு, உரிய நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்நடவடிக்கையின் மூலம் பொதுமக்களுக்கு தேவையான தரமான அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை அளித்திடும் நோக்கத்தை சிறப்பான முறையில் எய்திடும் வகையில், தொடர்ச்சியாக அமைந்துள்ள பகுதிகளை (contiguous areas) ஒருங்கிணைத்து, நிதி ஆதாரங்கள் உள்ளிட்ட வளர்ச்சிக்கான அனைத்து ஆதாரங்களும் சரியான அளவில் பயன்படுத்தப்படும் வகையில் உட்கட்டமைப்பு வசதி மேம்பாட்டிற்கான ஒட்டுமொத்த திட்டமிடுதலை மேற்கொள்ளவும், இடஞ்சார்ந்த திட்டமிடல் (spatial planning) உள்ளிட்ட பல்வேறு காரணிகளை ஒருங்கிணைத்தல் / திறம்பட செயலாக்குதல் மூலம் திட்டமிடப்பட்ட நகர்ப்புர வளர்ச்சியை நெறிமுறைப்படுத்தவும் ஏதுவாகும்.

நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளின் மறுசீரமைப்பின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டுள்ள தமிழ்நாடு அரசு, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணையின் பேரில் ஐந்து அரசாணைகளை வெளியிட்டுள்ளது. இவ்வரசாணைகள் தமிழ்நாடு அரசின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அரசு, நகரமயமாக்கலின் சவால்களை திறம்பட எதிர்கொள்ளும் வகையில், சீரான நகர்ப்புர வளர்ச்சி, செம்மையான நிருவாகம் ஆகியவற்றை உறுதிசெய்ய தேவையான இது போன்ற நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ளும்” என தெரிவிக்கப்பட்டது.

Read more ; நெருங்கிய தோழிகளாக இருந்த சமந்தா-சோபிதா.. இடையில் வந்த நாக சைதன்யா.. மூன்று பேரும் சேர்ந்து நடித்த படம் எது தெரியுமா..?

English Summary

The Tamil Nadu government has issued an ordinance to create 13 new municipalities in Tamil Nadu

Next Post

அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம்..!! திமுக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டில் செக் வைத்த அதிமுக..!!

Wed Jan 1 , 2025
A caveat petition has been filed in the Supreme Court on behalf of the AIADMK in the rape case of an Anna University student.

You May Like