நம்பிக்கை துரோகம் செய்தவர்கள் அதற்கான தண்டனையை அனுபவிக்கத் தொடங்கிவிட்டதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயல்வீரர்கள் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்துகொண்டு பேசினார். “அப்போது, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் கொள்கைகளை தமிழகத்தில் நிலைநாட்டுவதற்கு உண்மையான இயக்கம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தான் என்று தெரிவித்தார். ஜெயலலிதாவின் கொள்கைகளை நிலைநாட்ட அமமுகவில் ஒன்றிணைய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும், வருங்காலத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமையும் என்று நம்பிக்கை தெரிவித்த அவர், எம்.ஜி.ஆரின் கட்சியும், சின்னமும் நயவஞ்சகர்களின் கையில் சிக்கிக் கொண்டுள்ளதாகக் சாடினார். அங்கு வேறு வழியில்லாமல் சிக்கியுள்ள தொண்டர்கள் அமமுக-வை நோக்கி வரக்கூடிய காலம் நெருங்கி விட்டது என்றும் டிடிவி தினகரன் தெரிவித்தார். செய்த தண்டனைக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும் என்பதால் யாரையாவது பிடித்து தங்களை காப்பாற்றிக் கொள்வதற்கு அந்த இயக்கத்தை நடத்திக் கொண்டு உள்ளார்கள் என்றும் நம்பிக்கை துரோகம் செய்தவர்கள் அதற்கான தண்டனையை அனுபவிக்க தொடங்கி விட்டார்கள் என்றும் அவர் தெரிவித்தார். கடந்த நான்கு ஆண்டுகளில் எடப்பாடி பழனிசாமியின் தவறான ஆட்சியால் ஒரு விபத்தைப்போல் திமுக ஆட்சிக்கு வந்துவிட்டதாகவும், 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத திமுக திருந்தி இருக்கும் என்று நம்பி வாக்களித்த மக்கள் இன்று புலம்பிக் கொண்டிருப்பதாகவும் டிடிவி தினகரன் விமர்சித்தார்.